ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பந்துவீச்சில் அசத்திய சமி: இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பந்துவீச்சில் அசத்திய சமி: இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய அணி வீரர்கள்

இந்திய அணி வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டி20 உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்காத நிலையில் இன்றைய போட்டியில் ரசிகர்களின் ஆதங்கத்தைப் போக்கினர்.

  இருவரும் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை மேற்கொண்டாலும் தேவையான ரன்களையும் எடுக்கத் தவறவில்லை. நிதானமாக விளையாடி 50 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். அதிரடியை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கரிம் ஜனத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பன்ட் களமிறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்பதின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

  16-வது ஓவரில் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா இணை ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துகளை சிதறடித்தனர். ரிஷப் பன்ட் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களும், பாண்டியா 13 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்துள்ளது.

  அதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஹஸ்ரத்துல்லா ஸஷாய், முகம்மது ஷாஷத் களமிறங்கினர். ஷாஷத் ரன் ஏதும் எடுக்காமல் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரஹ்மத்துல்லா குர்பாஷ் களமிறங்கினார். மறுபுறம் நிதானமாக ஆடிய ஷாஷாய் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து குல்பதின் நயிப் களமிறங்கினார். நிதானமாக ஆடிய குர்பாஷ் 19 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நஜிபுல்லாவும் 11 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முகம்மது நபி 35 ரன்கள எடுத்து சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் அணியின் கரிம் ஜனத் மட்டும் 22 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் முகம்மது சமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, Indian team, T20 World Cup