• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய வீரர்கள் சூறாவளி ஆட்டம் - ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன்கள் இலக்கு

இந்திய வீரர்கள் சூறாவளி ஆட்டம் - ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன்கள் இலக்கு

ரோஹித், கே.எல்.ராகுல்

ரோஹித், கே.எல்.ராகுல்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர். கடந்த இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்காத நிலையில் இன்றைய போட்டியில் ரசிகர்களின் ஆதங்கத்தைப் போக்கினர்.

    இருவரும் எதிரணி வீரர்களின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தனர். தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை மேற்கொண்டாலும் தேவையான ரன்களையும் எடுக்கத் தவறவில்லை. நிதானமாக விளையாடி 50 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். அதிரடியை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 47 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கரிம் ஜனத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பன்ட் களமிறங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய கே.எல்.ராகுல் 48 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்பதின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    16-வது ஓவரில் ஜோடி சேர்ந்த ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா இணை ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துகளை சிதறடித்தனர். ரிஷப் பன்ட் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களும், பாண்டியா 13 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன்களை குவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் குல்பதின், ஜனத் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: