ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs PaK | கெத்து காட்டிய கிங் கோலி... கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

Ind vs PaK | கெத்து காட்டிய கிங் கோலி... கடைசி பந்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

India vs Pakistan | டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 வேகம் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

  இந்திய அணியின் அனுபவ வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவர் முதலே இந்தியாவின் வேகத்தில் பாகிஸ்தான் தடுமாற ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரை ஹர்ஸ்திப் சிங் வீசினார். முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஷம் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

  அடுத்தடுத்த ஓவர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். 4-வது ஓவரில் ஹர்ஸ்திப் சிங் பந்தை தூக்கி அடிக்க முயன்ற ரிஷ்வான் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து ஷான் மசூத் மற்றும் இப்திகார் அகமது பார்ட்னர்ஷிப் அமைத்து நிலையாக ஆடினார்கள்.

  இப்திகார் அகமது 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்த வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முயன்று ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி வெளியேறினர். மற்றொரு பக்கம் ஷான் மசூத் நிதானமாகவும் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

  இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஷான் மசூத் 52 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணியில் ஹர்ஸ்திப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முக்கியமான போட்டிகளில் ஒபனிங்கில் சொதப்பும் இந்திய அணி இன்று அதையே செய்தது. கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் 4 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் 15 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

  அக்ஷர் படேல் தேவை இல்லாத எடுக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி 31 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்த வந்த ஹர்டிக் பாண்டியா மற்றும் விராட் கோலி விக்கெட்களை காப்பாற்ற வேண்டும் என பொறுமையாக ஆடினார்கள். இதனால் ரன்ரேட் ஆமைவேகத்தில் நகர்ந்தது.

  ஆனால் இறுதி ஓவர்களில் தனது முழு அனுபவத்தையும் வெளிப்படுத்திய கோலி அதிரடியால் ரன்ரேட்டை எகிற வைத்தார்.  கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 18 ரன்கள் என்ற நிலையில் ஹர்திக் அதிரடியல் சொதப்பினாலும் விராட் கோலி பந்துகளை பறக்க விட்டார்.

   பரபரப்பாக சென்ற போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட பாண்டியா தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2-வது பந்தில் திணேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்தார். இதனால் 4 பந்துகளில் 15 ரன்கள் என்ற நிலையில் 3-வது பந்தில் விராட் கோலி 2 ரன்கள் சேர்த்தார். அடுத்து விராட் கோலியின் இடுப்புக்கு மேல் ஃபுல்டாஸாக வந்த பந்தை சிக்ஸருக்கு விரட்டினார். கூடுதலாக நோ பால் அதனுடன் அடுத்த பந்து ஃபரி ஹிட்டாக அமைந்நது. அடுத்த பந்து வொய்டாக அமைய ஃபரி ஹிட் தொடர்ந்து இருந்தது. 

  4-வது பந்து ஸ்டெம்பில் பட்டாலும் ஃப்ரி ஹிட் என்பதால் 3 ரன்களை ஓடி எடுத்தனர். இதனால் 2 பந்துகளில் 2 ரன்கள் என்று இருக்க 5-வது பந்தில் திணேஷ் கார்த்திக் அவுட்டானர். இதனால் ஒரு பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் போட்டி பரபரப்பின் உச்சத்திற்கே சென்றது. ரவிசந்திரன் அஸ்வின் எதிர்கொண்ட போது பவுலர் வொய்டு வீசி ரன்கள் சமநிலையானது. கடைசி பந்தை அஸ்வின் தூக்கி அடித்து ரன் சேர்த்ததால் இந்திய அணி வெற்றி பெற்றது. விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழாக்காமல் இருந்தார்.

  இந்தியா அணி வெற்றியடைய முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

  Published by:Vijay R
  First published: