• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • T20 World Cup 2021- தோனி தன் வரம்பை மீறுபவர் அல்ல: எல்.பாலாஜி

T20 World Cup 2021- தோனி தன் வரம்பை மீறுபவர் அல்ல: எல்.பாலாஜி

தோனி - கோலி

தோனி - கோலி

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகர் எம்.எஸ்.தோனியின் ஒளிவட்டம் அங்கு இருக்கும், ஆனால் எந்த காரணத்துக்காகவும் தோனி தன்னுடைய வரம்பை மீறி நடப்பவர் அல்ல என்று முன்னாள் இந்திய அணி பவுலரும் தமிழக முன்னாள் வீரருமான லஷ்மிபதி பாலாஜி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஐசிசி டி20 உலகக்கோப்பை இந்த முறை கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு அணியும் நட்சத்திர வீரர்களுடன் இளம் திறமைகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதோடு பேரிய தலைகளை ஆலோசகர்களாகவும் அணியில் சேர்க்கின்றனர். இலங்கை அணியில் மகேலா ஜெயவர்தனே, பாகிஸ்தான் அணி மேத்யூ ஹெய்டன் பேட்டிங் பயிற்சியாளராகவும் தென் ஆப்பிரிக்காவின் ஸ்விங் மேதை மேட் பிலாண்டரை பவுலிங் பயிற்சியாளராகவும் சேர்த்துள்ளனர். நியூசிலாந்து அணிக்கு ஸ்டீபன் பிளெமிங் தன் ஐபிஎல், யுஏஇ அணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்.

  இவர்களில் தோனி மட்டுமே டைட்டிலை எப்படி வின் செய்வது என்பதில் நுணுக்கமும் அனுபவமும் புத்தி கூர்மையும் மிக்கவர். 2007-லேயே தோனியின் அறிமுக கேப்டன்சியிலேயே பார்த்தோம் கோப்பையை வென்றார், ஆர்ப்பாட்டமில்லாமல் வென்றார். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை கேப்டனாக நம்பர் 1 நிலைக்கு இட்டுச் சென்றார். இப்போது தோனியை ஆலோசகராக நியமித்ததன் மூலம் டி20 உலகக்கோப்பையையும் 2ம் முறை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் விராட் கோலிக்கும் டி20-யில் கடைசி கேப்டன்சி வாய்ப்பு. ஐசிசி கோப்பை ஒன்றைக்கூட கோலி இதுவரை வென்றதில்லை.

  ஆனால் கவாஸ்கர் கூறியது போல் ரவி சாஸ்திரிக்கும் தோனிக்கும், தோனிக்கும் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடு வராமல் இருக்க வேண்டும். இந்நிலையில்தான் லஷ்மிபதி பாலாஜி தோனி பற்றிக் கூறும்போது, “தோனி இதே அணியுடன் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இருந்திருக்கிறார். எனவே தோனிக்கு அங்கு எதுவும் புதிதல்ல. தோனியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அவர் நிச்சயம் தன் எல்லை என்ன வரம்பு என்ன என்பதை நன்கு அறிந்தவர்தான்.

  களத்தில் தோனியின் பங்களிப்புக்கும் களத்துக்கு வெளியே தோனியின் பங்களிப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. அவர் எளிதாக கிரிக்கெட்டை அணுகுபவர், அவரையும் அனைவரும் எளிதாக அணுக முடியும். இருப்பினும் அவர் மீதான ஒளிவட்டம் இருக்கவே செய்யும். ஆனால் பலதரப்பட்ட வயதுடைய வீரர்களுடனும் அவர் எளிதில் உரையாடுபவர்.

  அணியின் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே உள்ள திரையை அவர் கிழித்தெறிபவர். அணியின் ஆலோசகர் என்பவர் ஒரு இணைப்பு. இங்கு அவர் ஒன்றையும் கட்டமைக்கத் தேவையில்லை, ஏற்கெனவே இந்திய அணி நன்கு கட்டமைப்பு உள்ள அணிதான். ஒரு சிறு மாற்றம் ஏற்படும் அது தோனியினால்தான் இருக்கும்.

  என்னதான் முழு நிறைவான அணியாக இருந்தாலும் ஏதோ ஒரு போதாமை இருக்கும் அந்தப் போதாமையை வெளியிலிருந்து பார்த்து ஆலோசனை வழங்குபவராக தோனி இருப்பார். தோனி வீரர்களுக்கு உறுதியளிப்பார் தனிமனித உணர்வு, திறமைகளுக்கு மதிப்பளிப்பார் தோனி. தோனி எளிமையான வார்த்தைகளுடன் கூடிய மனிதர். எதையும் எளிதாகவே அணுகுவார். தோனியின் தலைமைத்துவம் அவருக்கென்றே இருக்கும் தனித்துவ பாணி.

  கோலிக்கும் அவருக்கும் நல்ல புரிதல் உண்டு. எனவே தோனியின் அனுபவத்தை கோலி நல்ல முறையில் பயன்படுத்துவார் என்றே நான் நம்புகிறேன்” என்றார் பாலாஜி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: