• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நாக் அவுட்டில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியவை வீழ்த்தி இத்தனையாண்டுகள் ஆகிறதா?

நாக் அவுட்டில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியவை வீழ்த்தி இத்தனையாண்டுகள் ஆகிறதா?

நியூசி. ஆஸி.யை நாக் அவுட்டில் வீழ்த்தி 40 ஆண்டுகள் ஆகிறது.

நியூசி. ஆஸி.யை நாக் அவுட்டில் வீழ்த்தி 40 ஆண்டுகள் ஆகிறது.

நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை எப்போதும் ஆஸ்திரேலியா அணி பந்தாடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. உண்மையைக் கூற வேண்டுமெனில் கடந்த 40 ஆண்டுகளாக நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியதேயில்லை.

  • Share this:
    அன்று உலகக்கோப்பை டி20 அரையிறுதியில் வலுவான இங்கிலாந்து அணியை வெளியேற்ற டேரல் மிட்செல் அடித்த வின்னிங் பவுண்டரியை கேன் வில்லியம்சனும் ஜிம்மி நீஷமும் கொண்டாடவில்லை.

    நேற்று கிளென் மேக்ஸ்வில் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் துபாயில் வின்னிங் ரன்களை அடித்து ஆஸ்திரேலியா உலகக்கோப்பை டி20-யை முதன் முதலில் வென்ற போதும் நியூசிலாந்தின் ஒட்டுமொத்த அணியும் சிலையாய் சமைந்தனர்.

    நாக்-அவுட் போட்டிகளில் நியூசிலாந்து அணியை எப்போதும் ஆஸ்திரேலியா அணி பந்தாடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. உண்மையைக் கூற வேண்டுமெனில் கடந்த 40 ஆண்டுகளாக நாக்-அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியதேயில்லை என்பது கடும் ஆச்சரியமாக இருக்கிறது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தன் அபாரமான அதிரடியில் நேற்று வரலாற்றை திருத்தி அமைக்க முயன்றார். ஆனால் ஆஸ்திரேலியா மீண்டும் நியூசிலாந்தை சாத்தி எடுத்து விட்டதுதான் நடந்தது.

    ஆம்! கடைசியாக 1981ம் ஆண்டு பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் முத்தரப்பு ஒருநாள் தொடரில் சிட்னியில் நடந்த முதல் பைனலில் (அப்போது 4 பைனல்கள் நடக்கும்), நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நியூசிலாந்து அணியின் கேப்டன் ஜெஃப் ஹவர்த், பிற்பாடு இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த ஜான் ரைட் அந்தப் போட்டியில் தொடக்கத்தில் இறங்கி 111 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி 233 ரன்களுக்கு 6 விக்கெட் என்று 50 ஓவர்களில் முடிந்தது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டெனிஸ் லில்லி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், லென் பாஸ்கோ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். கிரெக் சாப்பல் தலைமை ஆஸ்திரேலியா அணி 155 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. வேகப்பந்து வீச்சு மாமேதை ரிச்சர்ட் ஹாட்லி 26 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இதோடு சரி, இதே 1981 முத்தரப்பு தொடரில் அடுத்த 3 இறுதிப் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் நியூசிலாந்து படுதோல்வி அடைந்ததைத்தான் பார்க்க முடிந்தது, இந்த முத்தரப்பு தொடரில் 3வது அணி இந்திய அணி என்றால் நம்ப முடிகிறதா? இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அதுவும் இந்திய அணி 208 ரன்களையே எடுத்தது, சந்தீப் பாட்டீல் 64 ரன்கள் விளாசினார். சையத் கிர்மானி 48. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 118/4 என்பதிலிருந்து 142 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. திலிப் தோஷி, இடது கை ஸ்பின்னர் 3 விக்கெட்டுகளைக்கைப்பற்றினார்.

    இதற்கு அடுத்த நியூசிலாந்து போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வென்றது, முதலில் பேட் செய்த இந்தியா 162 ரன்களைத்தான் எடுத்தது, மீண்டும் சந்தீப் பாட்டீல் 39 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார், தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 157 ரன்களுக்குச் சுருண்டது. ரோஜர் பின்னி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சந்தீப் பாட்டீல் பவுலிங்கிலும் 10 ஓவர் வீசி 24 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், திலிப் தோசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    இந்த முத்தரப்புத்தொடரில்தான் கடைசியில் நாக் அவுட்டில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வென்றது, அதன் பிறகு 40 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தவே இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: