• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021, SA vs WI - பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல- வெஸ்ட் இண்டீஸ் ஃபார்முக்கு வந்தால் தென் ஆப்பிரிக்கா அம்போ

T20 World Cup 2021, SA vs WI - பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல- வெஸ்ட் இண்டீஸ் ஃபார்முக்கு வந்தால் தென் ஆப்பிரிக்கா அம்போ

டி20 உலகக்கோப்பை 2021, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மோதல்

டி20 உலகக்கோப்பை 2021, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மோதல்

  • Share this:
    தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இரண்டுமே டி20 உலகக்கோப்பையில் தோல்வியுடன் தொடங்கியுள்ளன, அதில் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்து வீச்சில் நெருக்கடி கொடுத்து கடைசி 2 ஓவர்களில் 18 ரன்கள் தேவை என்ற அளவில் ஆஸ்திரேலியாவுக்கு 118 ரன்கள் இலக்கை வைத்துக் கொண்டு நெருக்கடி கொடுத்தது.

    மே.இ.தீவுகள் பேட்டிங் ஏதோ எல்லாப்பந்துகளையும் நாங்கள் சிக்சருக்குத்தான் அடிப்போம் என்பது போல் கொடியேற்றத்தில் முடிந்து 55 ரன்களுக்குச் சுருண்டனர், ஆனால் இங்கிலாந்தை இந்த 55 ரன்கள் எடுப்பதற்குள் தன் டாப் ஆர்டரை கழற்றி விட்டனர். ஆகவே தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பவுலிங் பிரமாதம், ஆனால் பேட்டிங்கில் எந்த அணி இன்று முன்னேறும் என்று பார்க்க வேண்டியுள்ளது.

    டி20 உலகக்கோப்பைகளில் இதுவரை 3 முறை இரு அணிகளும் மோதியுள்ளன. 2007, 2009, 2016. இதில் 2016-ல் மட்டும்தான் வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது, ஆனால் அவையெல்லாம் வேற வேற தென் ஆப்பிரிக்கா.

    இன்று துபாயில் இந்த அணிகள் மோதும் போது மதியம் 3.30 மணி ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்சனையிலிருந்து விடுபடுவார்கள். குவிண்டன் டி காக்குடன் அய்டன் மார்க்ரமை இறக்கி விட்டால் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு நிலைத்தன்மை கிடைக்கும். பவுமா 4ம் நிலையில் இறங்கி ஆடுவதுதான் சரி. டேவிட் மில்லரின் சந்தேகமான பார்ம், மிடில் ஆர்டரின் பலவீனம் அதிகமாக தென் ஆப்பிரிக்காவுக்கு உள்ளது. ஆனால் பவுலிங்கில் நார்ட்யே, ரபாடா, ஷம்சி, மகராஜ் உள்ளனர். பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்கா ஏதாவது மாற்றங்களை செய்தாக வேண்டும்.

    மாறாக வெஸ்ட் இண்டீஸ் அணி பெயரைக் கேட்டாலே சும்மா நடுங்குதுல்ல என்பது போல் எவின் லூயிஸ், சிம்மன்ஸ், ஹெட்மையர், நிகோலஸ் பூரன், கிறிஸ் கெய்ல், பொலார்ட், ரஸல், டிவைன் பிராவோ என்று நடுக்கம் தரும் வீரர்கள் உள்ளனர், இவர்களுக்கு மாட்டி விட்டால் ஸ்கோர் 180-190 எல்லாம் சர்வ சாதாரணம் ஆனால் சரிய ஆரம்பித்தால் 55-60 ரன்களில் மடிவதும் சர்வ சாதாரணமாகும்.

    நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் இந்த மேட்சை விடாது என்பதால் தென் ஆப்பிரிக்காவுக்குத்தான் அபாயம் காத்திருக்கிறது. இந்தப் போட்டியில் எந்த அணி தோற்றாலும் இரு அணிகளுக்குமே கடினம். வெஸ்ட் இண்டீஸின் ஆகக்குறைந்த ஸ்கோர் 45. இது அதிகமில்லை ஜெண்டில்மேன் 2019-ல்தான் இங்கிலாந்துக்கு எதிராக. தென் ஆப்பிரிக்காவும் சும்மா இல்ல 2020-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 89 ரன்கள் என்று குறைந்த ஸ்கோரை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தோளுக்குத் தோள் நிற்கிறது.

    வெஸ்ட் இண்டீஸ் உத்தேச லெவன்: சிம்மன்ஸ், எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரன் ஹெட்மையர், நிகோலஸ் பூரன், கிரன் பொலார்டு, ஆந்த்ரே ரஸல், டுவைன் பிராவோ, அகீல் ஹொசைன், ஆபெட் மெக்காய், ரவி ராம்பால்.

    தென் ஆப்பிரிக்கா: குவிண்டன் டி காக், மார்க்ரம், தெம்பா பவுமா, ராசி வான் டெர் டியூசன், மில்லர், ரீசா ஹென்றிக்ஸ், கேகிசோ ரபாடா, கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நார்ட்யே, தப்ரைஸ் ஷம்சி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: