ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 Worldcup| நியூசிலாந்துன்னா சும்மா இல்லை; தொடர்ச்சியாக 4வது உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி

T20 Worldcup| நியூசிலாந்துன்னா சும்மா இல்லை; தொடர்ச்சியாக 4வது உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி

வெற்றிக்கேப்டன் கேன் வில்லியம்சன், டெவன் கான்வே.

வெற்றிக்கேப்டன் கேன் வில்லியம்சன், டெவன் கான்வே.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றிருக்கிறது என்றால் அது சும்மா இல்லை என்பதுதான் உண்மை. உலகக்கோப்பைப் போட்டிகளில் எப்போதுமே நியூசிலாந்து அணி ஒரு அச்சுறுத்தல்தான். அதுவும் இப்போது அரையிறுதி நுழைவை அடுத்து 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பைகளில் தொடர்ச்சியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பையில் தொழில் நேர்த்தியுடன் ஆடி கிளினிக்கலாக வென்ற அணி ஒன்று இருக்கிறதென்றால் அது நியூசிலாந்து அணிதான். பாகிஸ்தான் அணி அதிரடி பார்மில் இருக்கிறது. துணைக்கண்டத்தில் SENA நாடுகள் அணிகளில் நியூசிலாந்துதான் கலக்குகிறது.

2015 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை அந்த கடைசி பந்து சிக்ஸ் மூலம் வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பிறகு மைக்கேல் கிளார்க் தலைமை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி தழுவி உலகக்கோப்பை வாய்ப்பை நழுவ விட்டது. 2016 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துடன் மோதி தோல்வி தழுவியது. பிறகு 2019 ஐசிசி 50 ஒவர் உலகக்கோப்பையில் அரையிறுதியில் இந்தியாவை குறைந்த இலக்கை வைத்துக் கொண்டு வீழ்த்தி பிறகு இறுதியில் அநியாயமான பவுண்டரி ரூல்கைனால் உலக சாம்பியன் ஆகும் வாய்ப்பை இழந்தது.

இப்போது 2021 உலகக்கோப்பை டி20-யில் மீண்டும் அரையிறுதியில் நுழைவு. எனவே நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடையும் என்ற நப்பாசையில் நேற்று மேட்ச் பார்த்தவர்களுக்கு கிரிக்கெட் அளவுகோல்களைத் தாண்டிய இந்திய அணியின் மீதான பாசமே பிரதானமாக இருந்திருக்கும், ஆனால் கிரிக்கெட் கோணத்தில் பெரிய தொடர்களில் நியூசிலாந்து அணி இப்போது அல்ல எப்போதுமே ஒரு அச்சுறுத்தல்தான்.

1992 உலகக்கோப்பையில் பெரிய அளவில் எழுச்சி பெற்ற நியூசிலாந்து உண்மையில் அந்த ஃபார்மேட் படி சாம்பியன் என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும், ஏனெனில் 2 போட்டிகளில் மட்டும்தான் தோல்வி தழுவியது, இரண்டுமே பாகிஸ்தானிடம், மற்றபடி எல்லா அணிகளையும் சவட்டி எடுத்தது. அந்த ஃபார்மேட் படி எல்லா அணிகளும் எல்லா அணிகளையும் எதிர்த்து ஆட வேண்டும் அப்படியிருக்கையில் அதிக வெற்றிகள் பெற்ற நியூசிலாந்துக்குத்தான் உலகக்கோப்பையை அளித்திருக்க வேண்டும், ஆனால் படுமோசமான திட்டமிடலால் பாகிஸ்தான் அந்த உலகக்கோப்பையை வென்றது.

மார்க் கிரேட்பேட்ச் என்ற ஒரு இடது கை அதிரடி வீரர் தொடக்கத்தில் இறங்கி எந்த பவுலர் என்னவென்று பார்க்காமல் அடித்து நொறுக்கினார். அவர் கொடுத்த தொடக்கம், இப்போதைய கேன் வில்லியம்சன் போல் அப்போதைய கேப்டன் மாமேதை மார்ட்டின் குரோவ் ஆகியோர் நியூசிலாந்துக்கு வெற்றி மேல் வெற்றியைக் குவித்துக் கொடுத்தனர். ஆனால் அதிர்ஷ்டமில்லை.

அந்த அணிக்குப் பிறகு 1998-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றனர். அப்போது கிறிஸ் கெய்ன்ஸ், நேதன் ஆஸ்ட்ல், மேக்மில்லன், கிரிஸ் ஹாரிஸ் போன்ற வீரர்கள் இருந்தனர். அதன் பிறகுதான் பிரெண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், டிம் சவுதி, ட்ரெண்ட் போல்ட், வெட்டோரி, போன்றோர் வந்து அணியை வெற்றிப்பாதைக்குத் திருப்பினர்.

Also Read: T20 Worldcup 2021| இந்திய அணி வெளியேற்றம்: மீம்கள் போட்டு கலாய்த்த சேவாக், ஜாஃபர்

2015 முதல் நியூசிலாந்து அணிக்கு வெற்றி முழக்கம்தான், ஆகவே நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாதாரண ரசிகர்களுக்குச் சாத்தியம் ஆனால் கிரிக்கெட் ஆடிய, கிரிக்கெட் தெரிந்த தமிழ் வர்ணனைக்குழுவுக்கும் இருந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

ஐசிசி டெஸ்ட் கோப்பையை வென்ற நியூசிலாந்து நிச்சயம் இந்த உலகக்கோப்பையை வெல்ல பாடுபடவே செய்யும், எனவே நியூசிலாந்துன்னா இனி பயப்பட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு எடுத்துக் காட்டிவிட்டனர்.

Published by:Muthukumar
First published:

Tags: New zealand v india, T20 World Cup