• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • நாங்கள் தைரியமாக ஆடவில்லை - விரக்தியில் விராட் கோலி

நாங்கள் தைரியமாக ஆடவில்லை - விரக்தியில் விராட் கோலி

விரக்தியில் விராட்.

விரக்தியில் விராட்.

 • Share this:
  டி290 உலகக்கோப்பை 2021-ல் 2 போட்டிகளில் ஆடி இந்தியா இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை. நேற்று இந்தியா வெறும் 110 ரன்களையே எடுக்க நியூசிலாந்து 111/2 என்று அபார வெற்றி பெற்று இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை நிழலுக்குள் தள்ளியது.

  பாகிஸ்தான் போட்டிக்கு முன்பான எதார்த்தமற்ற பில்ட்-அப்கள், அதன் பிறகான படுதோல்வி ஆகியவை ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை குவிக்க, ஷமியை அவதூறு செய்ததும் அதற்கு கோலி கடுமையான பதிலடி கொடுத்ததும் இந்திய அணியினரின் மனநிலையை பிரதிபலித்தது. இது போன்ற ஒரு பிரஷரில் எந்த அணியும் நன்றாக ஆட முடியாது. கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட்டைத் தாண்டிய பிரஷர் ஏற்படுத்தும் போது அது அவர்கள் ஆட்டத்தைப் பாதித்து தைரியமற்ற விதத்தில் நேற்று ஆடியதில் போய் முடிந்தது.

  ராகுல், ரோகித் சர்மா, கோலி என்று அனைவரும் பயந்து பயந்து ஷாட்களை தேர்வு செய்ததால் சரியாக சிக்கவில்லை. இந்திய அணியின் தோல்வி வீரர்களின் தோல்வி அல்ல, மாறாக ஊடகங்களும் சமூக ஊடகங்களும் கிரிக்கெட்டைத் தாண்டிய அழுத்தங்களினால் விளைந்த தோல்வி.

  இந்தக் கருத்தை பிரதிபலிக்கும் விதமாக நேற்றைய தோல்விக்குப் பிறகு விராட் கோலி கூறியதாவது: “விநோதம்தான்! உள்ளபடியே கூறவேண்டுமெனில் நாங்கள் போதிய தைரியத்துடன் ஆடவில்லை. பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி. பந்து வீச்சைப் பொறுத்தவரை பந்து வீச போதுமான ரன் இலக்கு இல்லை. களத்தில் நுழைந்த போதிலிருந்தே எங்கள் உடல் மொழி சரியில்லை, தைரியமானதாக இல்லை.

  பேட்டிங்கில் அடித்து ஆட வேண்டும் என்று ஆடிய போதெல்லாம் விக்கெட்டை இழந்தோம். இது டி20 கிரிக்கெட்டில் நடப்பதுதான். பேட்டிங்கில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும் ஷாட் ஆடுவதா வேண்டாமா என்ற இரட்டை மனநிலையில் ஷாட்டை ஆடுவோம், ஆட்டமிழப்போம். இது டி20 கிரிக்கெட்டில் சகஜம்.

  இந்திய அணிக்கு ஆடுவதென்றால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை திருப்தி செய்ய வேண்டும். இது அனைவருக்கும் தெரியும். கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து மட்டுமல்ல. வீரர்களிடமிருந்தே எதிர்பார்ப்புகள் இருக்கும். எப்போது ஆடினாலும் நாங்கள் உற்று நோக்கப்படுகிறோம், ரசிகர்கள் மைதானத்துக்கு வந்து நமக்கு ஆதரவு தருகின்றனர். எனவே எங்கள் ஆட்டத்தில் கொஞ்சம் கூடுதல் அம்சம் தேவைப்படுகிறது.

  இந்த எதிர்பார்ப்புகளை காலப்போக்கில் நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இந்தியாவுக்கு ஆடும் ஒவ்வொரு வீரரும் இதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இதனை ஒரு அணியாக நாம் அனுசரித்துப் போனால் கடினமான சூழ்நிலைகளை எளிதில் வென்று விடலாம். இந்த 2 போட்டிகளில் இதைச் செய்யவில்லை, அதனால் வெல்ல முடியவில்லை.

  டி20 கிரிக்கெட்டை ஆடும் விதம் ஒன்றேயொன்றுதான். நம்பிக்கையுடன் அடித்து ஆட வேண்டும். கணக்கிட்டு ரிஸ்க்குகளை எடுக்க வேண்டும், இந்திய அணியினர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியதில்லை. அந்த மனோபாவத்துடன் நாம் துண்டித்துக் கொள்ள வேண்டும். பாசிட்டிவ் மனநிலையில் ஆடுவோம், இன்னும் இந்தத் தொடரில் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது.” என்றார் விராட் கோலி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: