ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

முத்தரப்பு டி20 தொடர் : வெஸ்ட் இண்டீசை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி

முத்தரப்பு டி20 தொடர் : வெஸ்ட் இண்டீசை 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் அணி

ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர்

ஸ்மிருதி மந்தனா - ஹர்மன்ப்ரீத் கவுர்

10 பவுண்டரி மற்றும் சிக்சருடன் ஸ்மிருதி 74 ரன்களும், 8 பவுண்டரிகளுடன் ஹர்மன்ப்ரீத் கவுர் 56 ரன்களும் எடுத்தனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வென்றது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கேற்று முத்தரப்பு டி20 தொடர் இங்கிலாந்தின் கிழக்கு லண்டனில் உள்ள பஃபலோ பார்க் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்காவடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் 3ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். யஸ்திகா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக விளையாடினர். யஸ்திகா 23 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல் 12 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் – ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து விளையாடத் தொடங்கினார். இந்த இணை, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தது.

அதிரடியாக விளையாடிய இருவரும் அரைச்சதம் கடந்தனர். 10 பவுண்டரி மற்றும் சிக்சருடன் ஸ்மிருதி 74 ரன்களும், 8 பவுண்டரிகளுடன் ஹர்மன்ப்ரீத் கவுர் 56 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது. 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 168 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி வீராங்கனைகள் விளையாடத் தொடங்கினர். தொடக்க வீராங்கனைகள் ரஷாதா வில்லியம்ஸ் 8 ரன்னிலும், பிரிட்னீ கூப்பர் ரன் ஏதும் எடுக்காமலும் தீப்தி ஷர்மாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். ஷபிகா கஜ்னபி 3 ரன்னில் வெளியேறினார். 25 ரன்களுக்கு 3 விக்கெட் என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிக் கொண்டிருந்தபோது இணைந்த ஷெமைய்ன் கேம்ப்பெல் – கேப்டன் ஹேலி மேத்யூ இணை விக்கெட் இழப்பை சரிசெய்து ரன்களை சேர்த்தது. இருப்பினும் இந்திய அணியின் துல்லியமான பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கால் வெஸ்ட் இண்டீஸ் அணியால் ரன் குவிக்க முடியவில்லை. 20 ஓவர்களில் 4விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி அடுத்ததாக சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

First published:

Tags: Cricket