Home » News » Sports » CRICKET T20 AUSTRALIA TEAM BEAT INDIA IN LAST MATCH RIZ

இந்தியாவுடனான கடைசி டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி..

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில், ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்தியாவுடனான கடைசி டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி..
இந்தியாவுடனான கடைசி டி-20 போட்டியில் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி..
  • Share this:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது இருபது ஓவர் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச், வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டக்-அவுட்டானார்.

மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். கடைசிக் கட்டத்தில் வழக்கம் போல் மேக்ஸ்வெல் வாணவேடிக்கை நிகழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்தது.

20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்றொரு தமிழக வீரரான நடராஜன் 4 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து, ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.


இதையடுத்து, 187 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆனால், தொடக்க வீரர் லோகேஷ் ராகுல், தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவன், தனது பங்கிற்கு 28 ரன்கள் சேர்த்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய கேப்டன் கோலி அரைசதம் கடந்தார்.

Also read: அரசியல் அறிவிப்பு: வீட்டைச் சுற்றிலும் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்திய ரஜினிகாந்த்

கடைசி 5 ஓவர்களில் 76 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோலியும் - ஹர்திக் பாண்ட்யாவும் களத்தில் இருந்ததால் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பதற்றத்துடனே காணப்பட்டனர். இதற்கு ஏற்றார் போல் இருவரும் சிக்சர்களாக பறக்கவிட்டு மிரட்டினர்.இருப்பினும், 18-வது ஓவரில், ஆடம் ஜம்பாவின் பந்துவீச்சில் பாண்ட்யா ஆட்டமிழந்ததும், ஆஸ்திரேலிய வீரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். மேலும், 19-வது ஓவரின் முதல் பந்தில் கோலியும் வெளியேறியதால், ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்று, ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

ஏற்கனவே, முந்தைய இரு போட்டிகளிலுல் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் 2-1 என டி-20 கோப்பையை வென்றது. டி-20 போட்டியில் பேட்டிங்கில் மிரட்டிய ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகனாக ஜொலித்தார். இதையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், வருகின்ற 17-ம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட், பகல், இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: December 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories