முதல் அரைசதம் கண்டார் ‘ஸ்டைலிஷ்’ ஷுப்மன்’-45 ஓவர்களில் 22 மெய்டன்கள் விட்ட இந்திய அணி: ஆட்ட முடிவில் 96/2

முதல் அரைசதம் கண்டார் ‘ஸ்டைலிஷ்’ ஷுப்மன்’-45 ஓவர்களில் 22 மெய்டன்கள் விட்ட இந்திய அணி: ஆட்ட முடிவில் 96/2

சிட்னி டெஸ்ட்: ஷுப்மன் கில் அரைசதம்.

ரஹானே, லயன் ஆஃப் பிரேக்கை மட்டையை கொண்டு வராமல் கால்காப்பில் வாங்க பெரிய முறையீடு எழுந்தது, 15 விநாடிகள் அவகாசம் முடிந்த பிறகு டி.ஆர்.எஸ் அனுமதி அளிக்கப்பட்டது. எப்படியோ நாட் அவுட் என்று ரஹானே தப்பினார்.

  • Last Updated :
  • Share this:
சிட்னி டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணியின் கடைசி 8 விக்கெட்டுகளை 172 ரன்களுக்கு கைப்பற்றி 338 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் ஸ்டீவ் ஸ்மித்தை கடைசியில் ஒரு ஸ்டன்னிங் ரன் அவுட்டும் செய்து அசத்தினார்.

இன்றைய தினம் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, ஷுப்மன் கில்லுக்குச் சொந்தமானது.

இரண்டு யார்க்கர் பந்துகளில் கமின்ஸ், லயன் விக்கெட்டுகளையும் சாய்த்து தன் சமயோசித பந்துவீச்சில் அசத்தினார் ஜடேஜா, இன்று ஜடேஜா இல்லையெனில் இந்தியாவுக்கு மிகவும் சோர்வு தரும் நாளாக மாறியிருக்கும். ஏனெனில் ஸ்மித்தை வீழ்த்த முடியவில்லை, அவர் 27வது சதம் கண்டார். 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அசாத்திய த்ரோவுக்கு ரன் அவுட் ஆன போதுதான் ஆஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 5 ரன்களுடனும் புஜாரா 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஷுப்மன் கில் பிரமாதமாக ஆடி அரைசதம் கண்டவுடன் ஆட்டமிழந்த பிறகு 12.5 ஓவர்கள் நின்ற ரஹானே, புஜாரா ஜோடி 11 ரன்களையே எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி 105. 4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது, ஆனால் இதில் 15 ஓவர்களையே மெய்டன்கள் ஆக்கியது, ஆனால் இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் இன்று 45 ஒவர்களை ஆடியதில் 22 ஓவர்களை மெய்டன்களாக்கியுள்ளது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய பவுலிங் டைட்டாக இருந்தது. கமின்ஸ், ஹேசில்வுட், லயன், ஸ்டார்க் டைட்டாக வீசினர்.

ஆனால் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆடிய போது விறுவிறுப்பாக இருந்தது, ரோஹித் சர்மா ட்ரைவ், புல் ஷாட் என்று 3 பவுண்டரிகளையும் நேதன் லயன் பந்து ஒன்றை நேராக லாங் ஆனுக்கு சிகருக்கும் தூக்கினார். 26 ரன்களில் அவர் அற்புதமாக ஆடி வந்த போது ஹேசில்வுட் வீசிய சாதாரண பந்து ஒன்றை வலது கையை அழுத்தி ஆடியதால் மட்டையில் பட்டு எழும்பி ஹேசில்வுட்டிடமே கேட்ச் ஆனது, டி20 எஃபெக்ட்.

ஷுப்மன் கில் ஆட்டத்தைப் பார்க்கும் போது அசாருதீனை நினைவூட்டுகிறது, பின்னால் சென்று அவர் ஆடும் ஆஃப்திசை பஞ்ச் ஷாட்கள் கண்கொள்ளாக் காட்சி, அதே போல் ஷார்ட் பிட்ச்பந்தை ஹுக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார், நேதன் லயன் பந்துகளை ஆஃப் திசையில் டீப்பில் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார்.

101 பந்துகள் ஆடி 8 பவுண்டரிகளுடன் ஷுப்மன் கில் 50 ரன்கள் எடுத்து தன் டெஸ்ட் முதல் அரைசதம் எடுத்தவுடனேயே வெளியேறினார். அதுவரை பின்னால் சென்று அருமையாக ஆடிய கில், கமின்ஸின் இந்த வெளியே சென்றபந்துக்கு மட்டையை முன்னால் நீட்டி ஆடி எட்ஜ் ஆனார். கிரீன் கேட்ச் எடுத்தார்.

அதன் பிறகுதான் ரஹானே, லயன் ஆஃப் பிரேக்கை மட்டையை கொண்டு வராமல் கால்காப்பில் வாங்க பெரிய முறையீடு எழுந்தது, 15 விநாடிகள் அவகாசம் முடிந்த பிறகு டி.ஆர்.எஸ் அனுமதி அளிக்கப்பட்டது. எப்படியோ நாட் அவுட் என்று ரஹானே தப்பினார்.

இன்றைய ஆட்ட முடிவில் இந்திய அணி 96/2 என்று நல்ல மனநிலையுடன் பெவிலியன் சென்றது. நாளை ஆட்டம் இந்திய நேரம் காலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது.
Published by:Muthukumar
First published: