ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

‘பாடி லைன்’ பவுலிங்கில் பயம் காட்டிய ஆஸ்திரேலியா; வெட்ட வெளிச்சமான இந்திய அணியின் ஷார்ட் பிட்ச் பலவீனம்

‘பாடி லைன்’ பவுலிங்கில் பயம் காட்டிய ஆஸ்திரேலியா; வெட்ட வெளிச்சமான இந்திய அணியின் ஷார்ட் பிட்ச் பலவீனம்

பாடிலைன் பவுலிங்கில் ஆஸி.

பாடிலைன் பவுலிங்கில் ஆஸி.

புஜாரா நிறைய பந்துகளை முதுகில் வாங்கினார். நிறைய அடி வாங்கினார். ஆனால் உறுதியாக நின்றார், காயமடையவில்லை, ஆனால் ரன்கள் எடுக்காமல் இப்படி ஆடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவருக்கு கூற ஒருவரும் அங்கு இல்லை.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

சிட்னி டெஸ்ட் பிட்ச் பேட்டிங் பிட்ச்தான், ஆனால் எல்லா ஆஸ்திரேலிய பிட்ச்களையும் போலவும் பவுன்ஸ் கூடுதலாகவே இருக்கும். இடுப்புக்குக் கீழ் வரும் இந்திய பிட்ச்களில் ஆடி ஆடி இன்னும் அந்த ஷார்ட் பிட்ச் ஆக்ரோஷ எகிறு பந்தை எதிர்கொள்வதில் இந்திய அணி காலங்காலமாக சிக்கல்களைச் சந்தித்து மடிந்து வருகிறது.

சிட்னியின் 3ம் நாள் ஆட்டமும் பவுன்சர் மழை நாளாகவே அமைந்தது. 1980-ம் ஆண்டுகளில் மே.இ.தீவுகள் பயன்படுத்தும் அதே பயம் காட்டும் பாடி-லைன் பவுலிங்கை ஆஸ்திரேலியா நேற்று திறம்பட பயன்படுத்தியது.

“வேதநாயகம்னா பயம்” என்று சலீம் கவுஸ் விஜய் படம் ஒன்றில் சொல்வாரே அதே போல் ‘ஆஸ்திரேலியான்னா பயம்’ என்பதை உருவாக்க ஆஸி. பவுலர்கள் முடிவு செய்து வீசினர்.

புஜாரா நிறைய பந்துகளை முதுகில் வாங்கினார். நிறைய அடி வாங்கினார். ஆனால் உறுதியாக நின்றார், காயமடையவில்லை, ஆனால் ரன்கள் எடுக்காமல் இப்படி ஆடுவதில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவருக்கு கூற ஒருவரும் அங்கு இல்லை.

இந்திய அணியின் இந்தப் பலவீனத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் 3ம் நாள் ஆட்டத்தில் பயன்படுத்தினர். இயன் சாப்பல் எப்போதும் கூறுவார், ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை ரன்கள் எடுக்கும் வாய்ப்பாகப் பார்க்க வேண்டும், அதைக் கண்டு பயப்படக்கூடாது என்பார். 1980-களின் மே.இ.தீவுகள் உலக அணிகளை இந்த பவுன்சரைக் கொண்டுதான் அச்சுறுத்தின.

1974-75 தொடரில் மே.இ.தீவுகளில் ஒருமுறை பவுன்சர் மழை பொழிந்தனர் மே.இ.தீவுகளின் பயங்கர வேகப்பந்து வீச்சாளர்கள் இதில் இந்திய கேப்டன் பிஷன் பேடி 6 விக்கெட்டுகளுடன் ஸ்கோர் இல்லாமலேயே டிக்ளேர் செய்தார், காரணம் பவுலர்கள் காயம்பட்டு விடக்கூடாது என்பதே. ஆனால் நேற்று ஜடேஜாவை காயத்துக்கு இழந்து விட்டோம். தொடரிலிருந்து அவர் விலக நேரிட்டுள்ளது.

அதே போல் ஆஸ்திரேலியா அணி நேற்று பவுன்சர்களைப் பிரயோகம் செய்ததில் ரிஷப் பந்த், ஜடேஜா காயமடைந்தனர். இதில் ஜடேஜா தொடரிலிருந்தே விலக நேரிட்டது, ரிஷப் பந்த் முழங்கையில் சரியான அடி வாங்கி தற்போது சஹாதான் கீப் செய்து வருகிறார்.

ரிஷப் பந்த்தின் பேட்டிங் உத்தியை இதுவரை சரி செய்ய அங்கு ஆளில்லை. ரவிசாஸ்திரி இருக்கிறார், விக்ரம் ராத்தோர் இருக்கிறார், ஆனால் ரிஷப் பந்த் பேட்டிங்கின் போது இடது காலை பின்னால் ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்த்துவதற்குப் பதிலாக இன்னும் உள்ளே இழுத்துக் கொள்கிறார், இதனால் அவரால் ஷார்ட் பிட்ச் பந்தை எதிர்கொள்ள இயலவில்லை. ஆஃப் திசையில் ரன்கள் அடிக்க அவர் இவ்வாறு இடது காலை உள்ளே இழுத்து கொண்டு ஆடுகிறார். இது தவறான உத்தி. இடது காலை பேக் அண்ட் அக்ராஸ் உத்தியில் நகர்த்தினால்தான் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை ஹூக் ஷாட்டோ, புல் ஷாட்டோ, பாதுகாப்பாக ஆட முடியும்.

காயமடைந்த பந்த்.

நேற்று ரிஷப் பந்த்தை ஆஸி. பவுலர்கள் உண்மையில் அசிங்கப்படுத்தி விட்டனர்.

2ம் நாள் ஆட்டத்தில் புஜாரா, ராஹனே கடைசி 12.5 ஓவர்களில் 11 ரன்கள் எடுத்தனர், 3ம் நாள் ஆட்டத்தில் காலை 7 ஓவர்களில் 11 ரன்களையே எடுத்தனர். பேட் கமின்ஸ், ஹோஷ் ஹேசில்வுட், ஸ்டார்க், கிரீன் என்று அனைவரும் எகிறு பந்துகளை வீசி இந்திய பேட்ஸ்மென்கள் எப்போதும் இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு ஆடவே செய்தனர்.

ஷார்ட் பிட்ச் உத்தியை ரஹானே ஹூக் ஷாட்டை ஆடி எதிர்கொண்டார். ஆனால் பிட்சில் பந்துகள் எகிறு பந்தாகவும் சில வேளைகளில் தாழ்வாகவும் வந்தன. அதே போல் பாட் கமின்ஸ் பந்துகள் எகிறிக்கொண்டே இருந்தது, திடீரென ஒரு பந்து கொஞ்சம் தாழ்வாக ஆஃப் கட்டர் ஆக ரஹானே லேட் கட் ஆட முயன்று பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு 22 ரன்களில் வெளியேறினார்.

ஹனுமா விஹாரி இறங்கினார், இவருக்கும் அவரது உடலை நோக்கியே அம்பு போல் ஆஸ்திரேலிய பவுலர்கள் வீசினர். புஜாராவுக்கு லயன் பந்தில் வேட் கேட்சை விட்டார். விஹாரியை ஆட்டிப்படைத்தனர், அவருக்கு இதெல்லாம் என்னவென்றே புரியவில்லை. நிறைய பந்துகள் பீட் ஆனார், ஒரே இன்சைடு எட்ஜ்கள் என்று சொதப்பினார், பார்க்கவே பாவமாக இருந்தது. 37 பந்துகளில் 4 ரன்கள் என்று பரிதாபமாக ஆடினார். அப்போதுதான் சிங்கிள் எடுக்க மிட் ஆஃபில் தட்டி விட்டார்.

ஹேசில்வுட் அங்கு விழுந்த் பந்தை பிடித்து அற்புதமாக த்ரோ செய்ய பந்து நேராக ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்கியது. 142/4 என்ற நிலையில் ரிஷப் பந்த் தன் ஆட்டத்தில் எதிர்த்தாக்குதல் உத்தியில் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார். கட், புல்ஷாட்கள் ஆடினார், குனிந்தார், நிமிர்ந்தார், ஆனாலும் கமின்ஸின் ஆக்ரோஷ பந்து ஒன்ற் அவரது இடது கையைத் தாக்கியது. காயச் சிகிச்சைக்குப் பின் அவரால் சரியாக ஆட முடியவில்லை, ஹேசில்வுட் பந்தை எட்ஜ் செய்து 36 ரன்களில் அவர் காலியானார். ஸ்கோரிங் வாய்ப்புகளையெல்லாம் லொட்டு வைத்த புஜாரா 176 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் 5 இன்னிங்ஸ்களில் 4வது முறையாக எட்ஜ் செய்து வெளியேறினார்.

ரஹானே-புஜாரா

195/6-லிருந்து இந்திய அணி 244 ரன்களுக்குக் காலி ஆனது ஜடேஜா தைரியமாக ஆடினாலும் அவருக்கும் ஒரு எகிறு பந்து கையைப் பதம் பார்க்க இப்போது தொடரிலேயே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அஸ்வின் நன்றாக ஆடினார், ஆனால் லபுஷேனின் அற்புத பீல்டிக்கில் ரன் அவுட் ஆனார். பும்ராவும் லபுஷேனின் அபார டைரக்ட் ஹிட்டுக்கு ரன் அவுட் ஆனார்.

நவ்தீப் சைனி அன்று ஸ்டார்க்கிற்கு பவுன்சர்களாக வீசியதையடுத்து ஸ்டார்க் சைனிக்கு பவுன்சர் மழை பொழிந்தார். கடைசியில் ஷார்ட் பிட்ச் பந்துக்குத்தான் சைனி இரையானார். கமின்ஸ் 21.4 ஓவர்கள் 10 மெய்டன் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள்.

94 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விரைவில் ஆஸி தொடக்க வீரர்களைக் காலி செய்தனர், அறிமுக வீரர் வில் புகோவ்ஸ்கி சிராஜ் பந்தை எட்ஜ் செய்து சஹாவிடம் கேட்ச் ஆனார். வார்னர் 13 ரன்களில் அஸ்வின் பந்தை ஸ்வீப் ஆட முயன்று பந்தை கோட்டை விட்டு எல்.பி.ஆனார். ஆட்ட முடிவில் லபுஷேன், ஸ்மித் நிலைத்து ஆடினர். பந்து வீச்சும் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலத்தை இழந்தது.

ஆஸ்திரேலிய அணியினர் வெறும் பயம் காட்டியே பேட்டிங் பிட்சில் இந்திய அணியை மடித்து விட்டனர். அணுகுமுறையை இந்திய அணி மாற்றாவிட்டால் 2வது இன்னிங்சிலும் பாடிலைன் பவுலிங் நிச்சயம் தொடரும், அடுத்த பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை எகிறு பந்தில் நசுக்கி விடுவார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

Published by:Muthukumar
First published:

Tags: India vs Australia, Ravindra jadeja, Rishabh pant, Sydney