Home /News /sports /

சிட்னி டெஸ்ட்டை அபாரமாக ட்ரா செய்த இந்தியா; 259 பந்துகளை எதிர்கொண்டு பாறையாக நின்ற அஸ்வின் விஹாரி; ஆஸி.க்கு பீதியை கிளப்பிய பந்த் புஜாரா

சிட்னி டெஸ்ட்டை அபாரமாக ட்ரா செய்த இந்தியா; 259 பந்துகளை எதிர்கொண்டு பாறையாக நின்ற அஸ்வின் விஹாரி; ஆஸி.க்கு பீதியை கிளப்பிய பந்த் புஜாரா

சிட்னி டெஸ்ட் ட்ரா.

சிட்னி டெஸ்ட் ட்ரா.

ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி இணைந்து 62 ரன்கள் கூட்டணி அமைத்தனர். சுமார் 259 பந்துகள் பாறையாக நின்று ஆடினர், அஸ்வின் பாவம் உடம்பில் எல்லாம் அடி வாங்கினார், கையில் ஒருமுறை வாங்கி அவர் கத்தியது நம் காதுகளில் விழுந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சிட்னி டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி இன்று பிரமாதமாக ஆடி 334 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று டெஸ்ட்டை ட்ரா செய்தது. பாறையாக நின்ற அஸ்வின் 39 ரன்களையும், நகர முடியா காயத்துடன் ஆடிய ஹனுமா விஹாரி 23 ரன்களுடனும் நாட் அவுட்டாக இருந்தனர்.

இன்று 97 ஓவர்களை விளையாடி இந்தியா ட்ரா செய்தது, ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ரிஷப் பந்த், புஜாரா கூட்டணி ஆஸ்திரேலியாவுக்கு தோல்வி கிலியை ஏற்படுத்தினார்கள். கோலி இருந்திருந்தா நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். 1979-க்குப் பிறகு 400க்கும் அதிகமான இலக்கை எதிர்த்து வெற்றி காண வாய்ப்பு இருந்தது. ஆனால் ரிஷப் பந்த், புஜாரா ஆட்டமிழந்தவுடன் ஜடேஜா ஆட முடியாது என்பதால் அஸ்வின், விஹாரி அசைக்க முடியா பாறையாக ஆஸி. வெற்றி வாய்ப்பை முறியடித்தனர்.

டெஸ்ட் தொடர் இன்னும் 1-1 என்று சமனாகவே உள்ளது. ஆஸி.யின் வெற்றி கனவை முறியடித்த வகையில் ரோஹித் சர்மா, கில், ரிஷப் பந்த், புஜாரா, அஸ்வின், விஹாரி என்று பெரிய பங்களிப்புச் செய்துள்ளனர். மறக்க முடியாத ஒரு டெஸ்ட் டிரா ஆகும்.

பெரிய இலக்கை டெஸ்ட்டில் விரட்டும்போது நான்காவது பெரிய ட்ராவை இந்தியா செய்துள்ளது. அதாவது 1979-ல் 150.5 ஓவர்கள் ஆடி இங்கிலாந்துக்கு எதிராக ட்ரா செய்தது. 2021-ல் சிட்னியில் 406 ரன்கள் இலக்கை எதிர்த்து 131 ஓவர்கள் ஆடி சாதித்துள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின், ஹனுமா விஹாரி இணைந்து 62 ரன்கள் கூட்டணி அமைத்தனர். சுமார் 259 பந்துகள் பாறையாக நின்று ஆடினர், அஸ்வின் பாவம் உடம்பில் எல்லாம் அடி வாங்கினார், கையில் ஒருமுறை வாங்கி அவர் கத்தியது நம் காதுகளில் விழுந்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காத ஒரு அசாத்திய உறுதியைக் காட்டினர்.டிம் பெய்ன் ஸ்லெட்ஜிங்கில் செய்த கவனத்தை கேட்சைப் பிடிப்பதில் காட்டியிருக்கலாம். ரிஷப் பந்துக்கு ஆரம்பத்தில் ஒன்றும், நடுவில் ஒன்றும் விட்டதோடு கடைசியில் 10 ஓவர்கள் இருக்கும் போது ஹனுமா விஹாரிக்கு கேட்சை பாய்ந்து விட்டார். அதை பேசாமல் விட்டிருந்தால் ஸ்லிப்பில் வார்னர் கைக்கு எளிதாகச் சென்றிருக்கும். கவனம் செலுத்தாமல் ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்தால் வெற்றி வந்து விடுமா?

முன்னதாக ரஹானே இன்று காலை வந்தவுடனேயே லயனிடம் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரிஷப் பந்த், புஜாரா ஜோடி இணைந்து 148 ரன்களைச் சேர்த்தனர்.

ரிஷப் பந்த் 97 ரன்கள் எடுத்து நேதன் லயனை வெளுத்து வாங்கினார், அனைவரையும் அடித்தார். 97 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக லயனை அடிக்கப் போய் அவுட் ஆனார்.

புஜாரா 205 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 77 ரன்கள் விளாசி ஹேசில்வுட் பந்தை தவறான லைனில் ஆடி பவுல்டு ஆனார். அதோடு சரி. ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட்டுகள் இல்லை. 272/5லிருந்து 62 ரன்கள் சாதனைக் கூட்டணி அமைத்தனர் அஸ்வினும் ஹனுமா விஹாரியும்.

புஜாரா


ஆஸ்திரேலிய பவுலர்கள் கல்லை மட்டும்தான் இருவர் மீதும் விட்டெறியவில்லை, அவ்வளவு ஆக்ரோஷ பந்து வீச்சு. ஆனால் அஸ்வினும், விஹாரியும் பந்து வீச்சு, வார்த்தை வீச்சு என்று அனைத்தையும் தங்களது அமைதியான மன உறுதி மூலம் திறம்பட எதிர்கொண்டனர்.

ஜடேஜா காயமடைந்தார், ரிஷப் பந்த் கையைப் பதம் பார்த்தனர், ஆனால் அவரோ 2வது இன்னிங்ஸில் இன்னும் முன்னால் இறங்கி வெளுத்து வாங்கினார். அவரது அசாத்திய தைரியம்தான் பின்னால் அஸ்வின், விஹாரி உறுதிக்கு வித்திட்டது.

ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். இன்று உண்மையில் ஆஸ்திரேலியா 97 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளையே வீழ்த்த முடிந்தது.

பிரிஸ்பனில் ஜனவரி 15ம் தேதி கடைசி டெஸ்ட். இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும். ஜடேஜா காயமடைந்திருப்பதால் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published:

Tags: India vs Australia, R Ashwin, Rishabh pant, Sydney

அடுத்த செய்தி