• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சினா... கோலியா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவாஸ்கர்!

சச்சினா... கோலியா? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கவாஸ்கர்!

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர்

விராட் கோலி - சச்சின் டெண்டுல்கர்

சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சினா? கோலியா? என விவாதங்கள் சூடு பிடித்து வரும் நிலையில், முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஒருநாள் ஆட்டத்தில் மிகக் குறைந்த போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை புரிந்தபின் தீவிரமடைந்துள்ள கோலியா? சச்சினா? என்ற விவாதத்திற்கு ஜாம்பவான் கவாஸ்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சச்சின் ஓய்வுபெறவிருந்த நிலையில், இளம் வீரராக பரிமளித்த கோலியை, சச்சினுடன் விமர்சகர்கள் ஒப்பிடத்தொடங்கினர், சச்சினின் ஓய்வுக்குப்பின், எதிர்பார்த்தபடியே. இந்திய அணியின் முதுகெலும்பாக மாறினார் கோலி. இடையே, பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா சர்மாவுடன் காதல் என இளம் வயதுக்கே உரிய அம்சங்கள் குறுக்கிட்டாலும், அவையெதுவும், ஆட்டத்தை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்.

முந்தைய இங்கிலாந்து தொடரில், கோலி சொதப்பியபோது, அனுஷ்காவால் தான் அவர் சோடை போனதாக கண்டனக் கணைகள் பாய்ந்தன. அவற்றையெல்லாம் பின்னுக்குத்தள்ளி, காதலியுடன் பயணித்தபடியே, விஸ்வரூபமெடுத்து, சாதனை மேல் சாதனைகளை புரிந்து வருகிறார்.

sachin tendulkar and virat kohli
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி (கோப்புப்படம்)


அதேவேகத்தில், ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை, 205 போட்டிகளில் எட்டி, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். சச்சினைவிட 54 போட்டிகள் முன்னதாகவே அந்த இலக்கை எட்டியுள்ளார். அதனால் கோலிதான் சிறந்தவர் என பலர் கூறத்தொடங்கியுள்ளனர். சச்சின் ரசிகர்களோ, சச்சின் வேறு லெவல் என மல்லுக்கட்டுகின்றனர்.

கோலியை பொருத்தவரை, சச்சினை போல் அல்லாமல், டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 என மூன்று வித போட்டிகளிலும் ஒரே சமயத்தில் ஆடிவருகிறார். மாறாக, சச்சின் இச்சாதனையை எட்டியபோது 20 ஓவர் போட்டிகளே கிடையாது. கோலிக்கு உடலுழைப்பு அதிகம் ஆகியிருப்பதும் கண்கூடு. பீல்டராக கோஹ்லியின் பங்கு சச்சினை விட அளப்பரியது. பாய்ந்து சென்று ரன் அவுட் செய்வது, தடுத்து நிறுத்துவது, கேட்சுகளைப் பிடிப்பது என ஆட்டத்தின் போக்கையே கோலியின் பீல்டிங் திசைதிருப்பிவிடும்.

virat kohli
விராட் கோலி (கோப்புப் படம்)


பிட்னஸ், அர்ப்பணிப்பு உணர்வு போன்றவவற்றிலும் சச்சினுக்கு கோலி சளைத்தவரில்லை. சிக்ஸ் பேக்ஸே அதற்கு சாட்சி. சச்சினைப் போல் சதத்தை நெருங்கும்போது, அதை கடக்க அதிக பந்துகளை, வீணடிக்கும் வேலையும் விராட்டிடம் கிடையாது. ஓர் அணி, சேசிங்கின்போது தான் தன் பேட்ஸ்மென்களிடம் அதிகம் எதிர்பார்க்கும். சேசிங்கில் கோலியின் பேட்டிங் ஆவரேஜ், யார் சிறந்தவர் என்பதை உணர்த்தும்.

மேலும், சச்சின், முதல் 15 ஓவர்களில் வட்டத்திற்குள் பெரும்பாலானான வீரர்கள் நிற்கும்போது தொடக்க ஆட்டக்காரராகத்தான் அதிக ரன்கள் சேர்த்துள்ளார். கோலி அப்படியில்லை. அத்துடன், இந்திய கேப்டன் என்ற நெருக்கடியும் கூடுதல் சுமை. எனினும் சச்சின் ரசிகர்களுக்கு அவரை விட்டுக் கொடுக்க மனமில்லை.

ஆனால், கோலியா, சச்சினா என்ற சர்ச்சைக்கு, சச்சினை வாய்க்கு வாய் புகழ்ந்தவரும், மார்ஷல், ஹோல்டிங், லில்லி, ஹேட்லி, பிஷப், இம்ரான், அக்ரம், போன்ற தலைசிறந்த பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டவருமான இந்திய ஜாம்பவான் கவாஸ்கர், முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சுனில் கவாஸ்கர்


கோலி தொய்வின்றி தொடர்ந்து ரன் குவிக்கும் விதம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயம் என குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், களத்தில் புகும்போதே சதம் அடிப்பது உறுதி என்ற எண்ணம் கோலியிடம் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய எண்ணம், ஒன் அண்டு ஒன்லி, மறைந்த, சர் டான் பிராட்மேன் களம் புகும்போது மட்டுமே ஏற்படும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 99.94 பேட்டிங் சராசரியுடன், நினைத்துக் கூட பார்க்க முடியாத சாதனை புரிந்துள்ள பிராட்மேனுடன் கோலியை ஒப்பிட்டிருப்பதன் மூலம் சச்சினின் மனம் நோகாமல், கோலியை உயர்ந்த பீடத்தில் ஏற்றி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கவாஸ்கர். கோலியிடம் ஆக்ரோஷமும் சேர்ந்திருப்பதால் அவர் களம்புகும்போது, அவரது கண்களைப் பார்க்கவே எதிரணியினர் அச்சப்படுவதாகவும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: