73 ஆண்டு கால டெஸ்ட் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!

73 ஆண்டு கால டெஸ்ட் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
ஸ்டீவ் ஸ்மித்
  • Share this:
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார் . இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 73 ஆண்டு காலமாக இருந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இராண்டாம் நாள் ஆட்டம் அடிலைடின் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் நான்காவது வீரராகக் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 23 ரன்களைக் கடந்தபோது 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 73 ஆண்டுகளாக இச்சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்த இங்கிலாந்தின் வேலி ஹாமண்டை ஸ்மித் பின்னுக்குத் தள்ளினார்.


இச்சாதனையை நிகழ்த்த வேலி ஹாமண்ட் மொத்தம் 131 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார். ஆனால், ஸ்மித் தனது 126வது இன்னிங்ஸிலேயே ஹாமண்டின் சாதனையை தகர்த்தெறிந்துவிட்டார். ஸ்டீவ் ஸ்மித் விளையாடும் 70ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர் சேவாக், விராட் கோலி ஆகியோர் 7,000 ரன்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் ஸ்மித்தை விடப் பின்தங்கியே இருக்கின்றனர். சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 136 இன்னிங்ஸ்களிலும், கோலி 138 இன்னிங்ஸ்களிலும் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தனர். இந்தியா சார்பாக மிக வேகமாக 7,000 டெஸ்ட் ரன்களைக் கடந்த வீரராக சேவாக் முதலிடத்தில் இருக்கிறார்.

இன்றைய ஆட்டத்தில் மேலும் ஒரு சாதனையை ஸ்மித் புரிந்துள்ளார். பேட்டிங் ஜாம்பவானான டான் பிராட்மேனின் 6,996 டெஸ்ட் ரன் சாதனையை ஸ்மித் மிஞ்சியுள்ளார். ஆனால் பிராட்மேன் இந்த ரன்களை தனது 52ஆவது போட்டியிலேயே கடந்துவிட்டார்.

Loading...

2018- ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியதற்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் ஸ்மித்துக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலிக்கு கடும் போட்டியாக வலம் வருகிறார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளி ஸ்மித் முதலிடத்தில் இருக்கிறார் .

குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்கள் கடந்த வீரர்கள்

126* - ஸ்டீவன் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

131 - வால்டர் ஹேமாண்ட் (இங்கிலாந்து)

134 - வீரேந்திர சேவாக் (இந்தியா)

136 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

138 - கேரி சோபர்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)

138 - குமார் சங்ககாரா (இலங்கை)

138 - விராட் கோலி (இந்தியா)
First published: November 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...