இந்திய அணியின் கேப்டன் ஆகிறார் ஷிகர் தவான்?

ஷிகர் தவான்

மூத்த வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் ஜூலை மாத இலங்கையில் நடைபெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் புதிய இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை நாட்டை உலுக்கி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வரும் மாதத்தில் கிரிக்கெட்டில் மிகவும் ‘பிசி’யாக இருக்கும் என்று தெரிகிறது. மூத்த வீரர்கள் இங்கிலாந்தில் இருப்பார்கள் என்பதால் ஜூலை மாத இலங்கையில் நடைபெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட் தொடருக்கு ஷிகர் தவான் தலைமையில் புதிய இந்திய அணி தேர்வு செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆட இந்திய அணி நியூஸிலாந்தை எதிர்கொள்ள ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராகவும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் 20 வீரர்கள் கொண்ட இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதையடுத்து மூத்த வீரர்கள் ஜூலை மாதத்தில் நடைபெறும் இலங்கை தொடருக்கு இருக்க மாட்டார்கள்.

  இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் (ஜூலை 13, 16, 19) 3 டி20 போட்டிகள் (ஜூலை 22, 24, 27) நடபெறுகிறது. கொரோனா காலகட்டம் ஆதலால் தனிமைப்படுத்தல், டெஸ்ட் போன்றவைகள் உள்ளதால் சீனியர் வீரர்கள் பங்கேற்பது கடினமாகியுள்ளது. இதனையடுத்து ஷிகர் தவானை கேப்டனாக நியமித்து புதிய, இளம் அணியை இலங்கைக்குத் தேர்வு செய்ய முடிவாகியுள்ளது.

  இதனால் இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, திவேத்தியா உள்ளிட்ட வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் இடத்துக்கு சஞ்சு சாம்சன், அல்லது இஷான் கிஷன் தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.

  இதற்கிடையில் ஷ்ரேயஸ் அய்யர் உடல்தகுதி பெற்று நல்ல நிலைக்கு வந்தால் அவருக்கும் கேப்டன்சி அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

  இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது, “இலங்கைத் தொடருக்கு டி20, ஒருநாள் ஸ்பெஷலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாறுபட்ட புதுமுக இந்திய அணியாக அது இருக்கும்” என்றார்.

  ஷிகர் தவானின் சுயநலமற்ற பேட்டிங், அவரது அமைதியான குணம் ஆகியவை இந்திய இளம் அணியை வழிநடத்த சரியாக இருக்கும் என்று தேர்வுக்குழுவும் நம்புவதால் ஷிகர் தவானுக்கு புதிய பொறுப்பு கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 5டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது.
  Published by:Muthukumar
  First published: