2011 உலகக் கோப்பை: இந்திய அணி மீதான அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை வீரர்கள் மறுப்பு

மேட்ச் பிக்சிங் மூலம் இந்திய அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது எனும் முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

2011 உலகக் கோப்பை: இந்திய அணி மீதான அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு இலங்கை வீரர்கள் மறுப்பு
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டி (கோப்புப்படம்)
  • Share this:
2011ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கால் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் கூறியுள்ள குற்றச்சாட்டிற்கு அந்நாட்டு வீரர்களே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட்டின் வாழும் வரலாறு சச்சின் டெண்டுல்கர் பங்கேற்ற கடைசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா. கம்பீரின் கம்பீர ஆட்டமும், தோனியின் வான வேடிக்கை விளாசலாலும் வசப்பட்டது அந்த உலகக்கோப்பை.

ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி மேட்ச் பிக்சிங்கால் கோப்பையை வென்றது என்றும் இந்தியாவிற்கு உலகக்கோப்பை விற்கப்பட்டது என்றும் அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதில் வீரர்களுக்கு தொடர்பில்லை என்றும், ஆனால் வேறு சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

Also see:
அந்த இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களான குமார சங்ககரா, மஹேல ஜெயர்தனே ஆகியோர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்கள். தேர்தல் காலம் என்பதால் அரசியல் விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள் என அந்த இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஜெயவர்தனே கிண்டலடித்துள்ளார்.

ஆதாரம் இருந்தால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுங்கள் என்று அப்போதைய அணியின் கேப்டன் குமார சங்ககரா தெரிவித்துள்ளார். இது சச்சின் டெண்டுல்கரை களங்கப்படுத்தும் செயல் என்பதால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் வாரியமும் விசாரணை நடத்தி இந்த களங்கத்தை போக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவருமான அரவிந்த் டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். பொய் சொல்லித் திரிபவர்களை விட்டுவிடக் கூடாது என்றும் அவர் சாடியுள்ளார்.

குற்றம்சாட்டிய மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள நிலையில், மேட்ச் பிக்சிங் புகார் பற்றி விசாரிக்க இலங்கை விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் கேப்டனும், இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக இருந்தவருமான ரணதுங்காவும், இந்திய அணியின் வெற்றி குறித்து 3 வருடங்களுக்கு முன்பே சந்தேகம் கிளப்பியிருந்தார். தற்போது, முன்னாள் அமைச்சரே இந்திய அணி பெற்ற கோப்பை பணத்திற்காக விற்கப்பட்டது என கூறியுள்ளபோதும், இதுவரை இந்திய கிரிக்கெட் வாரியமோ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை.
First published: June 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading