Home /News /sports /

பாகிஸ்தான் படுதோல்வி- 246 ரன்களில் இலங்கை வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்

பாகிஸ்தான் படுதோல்வி- 246 ரன்களில் இலங்கை வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்

வெற்றிகர இலங்கை அணி கொண்டாட்டம்

வெற்றிகர இலங்கை அணி கொண்டாட்டம்

கால்லே டெஸ்ட் போட்டியின் 5ம் நாளான இன்று 508 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு 89/1 என்று இறங்கிய பாகிஸ்தான் அணி 261 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை இதன் மூலம் 1-1 என்று சமன் செய்தது.

கடந்த வாரம் இதே காலே டெஸ்ட் போட்டியில் 342 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி வென்ற பாகிஸ்தான் இந்த முறை தாங்கவில்லை. வந்தவுடன் இமாம் உல் ஹக், 49 ரன்களில் மெண்டிஸ் பந்தை கட் செய்ய முயன்று எட்ஜ் ஆகி டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு கேப்டன் பாபர் அசாம் (81), ரிஸ்வான் (37) சேர்ந்து 79 ரன்கள் சேர்த்து செட்டில் ஆனது போல் தெரிந்தனர், ஆனால் அப்போது ரிஸ்வான், பிரபாத் ஜெயசூரியாவின் பந்து ஒன்றை தவறாகக் கணித்து ஆடாமல் விட ஆஃப் பைல் கீழே விழுந்தது. பிரபத் ஜெயசூரியா தன் 6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 4வது முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இன்று 117 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்ற, ரமேஷ் மெண்டிஸ் 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

லஞ்சுக்கு முன்னாலிலிருந்தே ஜெயசூரியாவும் மெண்டிஸும் இணைந்து பவுலிங் செய்து 85 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். பவாத் ஆலம் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். பாபர் அசாம் 146  பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார். முதலில் ஜெயசூரியா பந்தில் நடுவர் எல்.பி.என்று தீர்ப்பளிக்க ரிவியூவில் தப்பினார் பாபர் அசாம், ஆனால் அதன்பிறகு ஜெயசூரியாவின் நேர் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார் பாபர் அசாம்.

உணவு இடைவேளைக்கு கடைசி அரைமணி நேரத்துக்கு முன்னால் பந்துகள் திடீரென எழும்பின திரும்பின, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆகா சல்மான் ஒரு நேர் பவுண்டரியுடன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பெடல் ஸ்வீப் ஆடுகிறேன் என்று குசால் மெண்டிஸிடம் ஷார்ட் பைன்லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். பாபர் அசாமுக்கு அவர் 78 ரன்களில் இருந்த போது தனஞ்ஜெயா ஸ்லிப்பில் கேட்சை விட்டார். ஆனால் அடுத்த ஓவரே பாபர் அவுட் ஆனார்.

முகமது நவாஸ் கவர் திசையில் கேட்ச் கொடுத்து ரமேஷ் மெண்டிஸிடம் அவுட் ஆனார். யாசிர் ஷா இறங்கி 6 பவுண்டரிகள் விளாசி 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஜெயசூரியாவின் 5வது விக்கெட் ஆனார். மெண்டிஸை ஸ்வீப் ஆட முயன்று ஹசன் அலி காலியானார். நசீம் ஷாவும் கேட்ச் ஆகி வெளியேறினார்.
இலங்கை வெற்றியடைந்தது அதனால் தொடர் 1-1 என்று சமன் ஆனது.

ஏதோ ஒரு அணி 2-0 என்று வென்றிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு கிட்டியிருக்கலாம். ஆனால் இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை, இரு அணிகளுக்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. ஆட்ட நாயகனாக 2வது இன்னிங்ஸில் சதமெடுத்த தனஞ்ஜெய டிசில்வா தேர்வு செய்யப்பட தொடர் நாயகனாக பிரபத் ஜெயசூரியா தேர்வு செய்யப்பட்டார்.
Published by:Muthukumar
First published:

Tags: Pakistan cricket, Sri Lanka, Test cricket

அடுத்த செய்தி