தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. தொடக்கத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சால் முடிவு மாறியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று ப்ளோம் ஃபோன்டைன் நகரில் உள்ள மேன்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை முதலில் தேவு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக், கேப்டன் பவுமா களம் இறங்கினர். டி காக் 37 ரன்களும், பவுமா 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வான்டர் டசன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 111 ரன்கள் குவித்தார். மில்லர் அவருடன் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து 53 ரன்கள் சேர்த்தார்.
50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். மிகச்சிறப்பான தொடக்கத்தை அளித்த அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ஜேசன் ராய் மற்றும் டேவிட்மாலன் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 20 ஓவர்களுக்கு உள்ளாக இந்த ரன்கள் சேர்க்கப்பட்டது. மாலன் 59 ரன்னில் ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜேசன் ராய் 113 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கேப்டன் ஜாஸ் பட்லர் 36 ரன்கள் சேர்த்தார்.
தொடக்க வீரர்களை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் உறுதியான பார்ட்னர்ஷிப்பை அமைக்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விழுந்து கொண்டிருந்தன. 33.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 222 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின்னர் விக்கெட்டுகளை விறுவிறுவென விழுந்ததால் 44.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து 271 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்க அணியின் ஆன்ட்ரின் நோட்ஜ் அதிரடியாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை எடுத்தார். சிசாண்டா மகலா 3 விக்கெட்டுகளையும், கசிகோ ரபடா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டேவிட் மாலன், ஹேரி ப்ரூக், மொயின் அலி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை எடுத்த தென்னாப்பிரிக்க அணியின் பவுலர் சிசாண்டா மகலா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket