ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

தென் ஆப்ரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி

தென் ஆப்ரிக்கா டி20 கிரிக்கெட் போட்டி

4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்திய பாங்கிசோ ஆட்ட நாயகனாக தேர்வானார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • interna, IndiaSouth Africa South Africa

கெபெர்ஹா எஸ்ஏ டி20 கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்.

முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணியானது 18.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்க வீரரான ஜோர்டான் ஹெர்மான் 3 ரன்னில் ஜெரால்டு கோட்ஸி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சார்ல் எர்வீயை (0), டு பிளெஸ்ஸிஸ் அற்புதமாக ரன் அவுட் செய்தார். மிட் ஆன் திசையில் ஆடம் ராஸிங்டன் அடித்த பந்தை பாய்ந்து தடுத்த, டு பிளெஸ்ஸிஸ் கண நேரத்தில் நான் ஸ்டிரைக்கர் திசையில் இருந்த ஸ்டெம்பை தகர்த்து எர்வீயை வெளியேற்றினார்.

அடுத்த களமிறங்கிய கேப்டன் எய்டன் மார்க்ரம் 5 ரன்களில் ரோமேரியோ ஷெப்பர்டு பந்தில் நடையை கட்டினார். விரைவாக ரன்கள் சேர்த்த ஆடம் ராஸிங்டன் 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் பங்கிசோ பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (4) , மார்கோ யான்சன் (6), ஜேஜே ஸ்மட்ஸ் (22) ஆகியோரை சீரான இடைவெளியில் வெளியேற்றினார் பங்கிசோ. பிரைடன் கார்ஸ் 11, ரால்ஃப் வான் டெர் மெர்வி 4, ஜேம்ஸ் புல்லர் 27 ரன்களில் ஜெரால்டு காட்ஸி பந்தில் ஆட்டமிழந்தனர். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஜெரால்டு கோட்ஸி, பங்கிசோ ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.

128 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 6 ரன்னில் மகலா பந்தில் ஆட்டமிழந்தார். நீல் பிராண்ட் 16 ரன்களில் வான் டர் மெர்வி பந்தில் போல்டானார். நிதானமாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 38 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 37ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மட்ஸ் பந்தில் வெளியேறினார். ஷிபோனேலோ 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். டோனவன் பெர்ரிரா 4 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் டு பிளாயுடன், ரோமேரியோ ஷெப்பர்டு களத்தில் இருந்தார். மகலா வீசிய 18-வது ஓவரில் டு பிளாய் 2 பவுண்டரிகளை விரட்டினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. வான் டெர் வீசிய அடுத்த ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. மகலா வீசிய கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை டு பிளாய் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் இது 3-வது நடுவரால் நோபால் என அறிவிக்கப்பட்டது. இதனால் கூடுதலாக ஒரு ரன் கிடைக்க ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டு பிளாய் 40 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் ரோமேரியோ ஷெப்பர்டு 9 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 12 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு இது 3-வது தோல்வியாக அமைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் தொடர்கிறது. இரு அணிகளுமே 12 புள்ளிகளை பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் 3-வது இடம் வகிக்கிறது.

4 ஓவர்களை வீசி 20 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்திய பாங்கிசோ ஆட்ட நாயகனாக தேர்வானார். அவர் கூறும்போது, “எல்லாமே கடின உழைப்பில்தான் உள்ளது. இதுபோன்ற தொடரில் விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிக அளவிலான பயிற்சி மற்றும் அனுபவமே சிறப்பாக செயல்பட உதவுகிறது. எனது பலத்துக்கு தகுந்தவாறு சிறந்த நீளத்தில் பந்து வீச முயற்சி செய்வேன். ஆடுகளம் அதிக அளவில் உதவியாக இருந்தது” என்றார்.

எஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் – பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும், இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. போட்டிகளை ஜியோ சினிமா செயலி, ஸ்போர்ட்ஸ் 18–1, ஸ்போர்ட்ஸ் 18 கேல் மற்றும் கலர்ஸ் தமிழ் சானலில் காணலாம்.

First published:

Tags: Cricket, South Africa, T20