கங்குலிக்கு கேப்டன்சிதான் முக்கியம், தனது கிரிக்கெட்டை மேம்படுத்த அவர் விரும்பவில்லை: கிரெக் சாப்பல்

கங்குலி

சவுரவ் கங்குலிக்கு கேப்டன்சிதான் முக்கியம், தன் கிரிக்கெட்டை மேம்படுத்துவதில் அவருக்கு விருப்பமேயில்லை என்று முன்னாள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் கூறியுள்ளார்.

 • Share this:
  கங்குலிதான் கிரெக் சாப்பலை தலைமைப் பயிற்சியாளராகக் கொண்டு வர பச்சைக் கொடி காட்டியவர். 2005 முதல் 2007 வரை கிரெக் சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார், அணியில் சீனிய்ர் வீரர்களின் இடம் உத்தரவாதமாக இருந்தது, இளம் வீரர்களுக்கான வாய்ப்பு அருகி வந்த நிலையில்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது, பிறகு சாப்பல் பயிற்சியாளராக இருந்த போதே திராவிட் கேப்டனாக்கப்பட்டார்.

  அப்போது ஏகப்பட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, ரெய்னாவெல்லாம் அந்தக் காலக்கட்டத்தில் உருவான வீரர்தான். ரிதீந்தர் சிங் சோதி, முகமது கைஃப், தினேஷ் மோங்கியா, விஆர்வி சிங், வேணுகோபால் ராவ், இப்போது மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான மும்பை ஆஃப் ஸ்பின்னர் ரமேஷ் பவார், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், இர்பான் பதான், முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஆர்.பி. சிங் என்று ஒரு படையே வந்தது.

  திராவிட் கேப்டன்சியில் ஒருநாள் கிரிக்கெட்டில் 3ம் நிலையில் பரிசோதனை முயற்சியாக பல வீரர்கள் முயற்சி செய்யப்பட்டனர். ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான் இந்தியா 17 போட்டிகளில் தொடர்ச்சியாக இலக்கை விரட்டி வென்றது, இதுவும் கிரெக் சாப்பல் பயிற்சிக்காலத்தில்தான். கடைசியில் 2007 உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் ‘சீரழிவுதான் காத்திருக்கிறது’ என்று ஒரு பயிற்சியாளராகக் கூறியது கடும் சர்ச்சைகளைக் கிளப்ப உலகக்கோப்பை தோல்விக்குப் பிறகு இவரால் பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க முடியவில்லை.

  இந்நிலையில் கிரெக் சாப்பல் கூறியதாவது:

  இந்திய அணிக்குப் பயிற்சி அளிக்குமாறு என்னை கங்குலிதான் அணுகினார். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன, ஆஸ்திரேலிய அணியை ஜான் புக்கானன் பயிற்சி செய்து கொண்டிருந்ததால் கிரிக்கெட் வழிபாடு நடத்தும் நாடான இந்திய அணியை பயிற்சி செய்யும் வாய்ப்பை நான் ஏற்றுக் கொண்டேன். சவுரவ்தான் அப்போது கேப்டன், அவர்தான் என்னை அணுகினார், நானும் வாய்ப்பைப் பயன்படுத்தினேன்.

  இந்தியாவில் 2 ஆண்டுகள் கடும் சவால் காத்திருந்தது. எதிர்பார்ப்புகள் பயங்கரமாக இருந்தது. சவுரவ் கங்குலி கேப்டனாக இருப்பதில் சில விவகாரங்கள் எழுந்தன. அவர் கடினமாக உழைக்க விரும்பவில்லை. அவர் தனது கிரிக்கெட்டை மேம்படுத்திக் கொள்ள விருப்பம் காட்டவில்லை. ஒரு கேப்டனாக அணியில் நீடிக்கவே விரும்பினார். அதன் மூலம் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிவெடுத்தார்.

  இவ்வாறு கூறினார் கிரெக் சாப்பல்.

  சாப்பல் காலக்கட்டத்தை அவர் சென்ற பிறகு பலரும் விமர்சித்தனர்.
  Published by:Muthukumar
  First published: