பிரிஸ்பனில் ஆஸ்திரேலியாவை இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் செய்வது என்பது அரிது, 2008க்குப் பிறகு முதல் முறை, 1987 முதல் 3 முறைதான் ஆஸ்திரேலியா பிரிஸ்பனில் இரு இன்னிங்ஸ்களிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இதில் முகமது சிராஜின் பங்கு அபரிமிதமானது, 294 ரன்களுக்கு ஆஸி.யை மட்டுப்படுத்தியதில் 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தினார், அதிலும் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஏற்றிய பந்து ஸ்ரீசாந்த், ஜாக் காலீஸுக்கு ஏத்திய பவுன்சரை நினைவுக்குக் கொண்டுவந்தது. ஸ்மித் போங்கு ஆடப் பார்த்தார், கையை எடுத்து விட்டேன் ஹேண்டிலில் என் கிளவ் இல்லை என்றெல்லாம் செய்கை செய்து ரிவியூவில் தோல்வி அடைந்தார்.
ஒரு ஜோப்ரா ஆர்ச்சர் டெலிவரி அது. ஸ்மித் கடுப்புடன் வெளியேறினார். இதோடு ஒரு புதிய பவுலராக பிரிஸ்பனில் முன் பின் அனுபவம் இல்லாமல் சரியான லெந்தைப் பிடித்தார் பாருங்கள் அங்குதான் சிராஜ் நிற்கிறார்.
பிரிஸ்பனில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 5வது வீரர் ஆவார், ஜாகீர் கானுக்குப் பிறகு சிராஜ்தான். முன்னதாக பிரசன்னா, பேடி, மதன்லால் உள்ளனர்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட இந்த முழுவீச்சு உத்வேகத்தின் காரணத்தை அவர் தெரிவித்துள்ளார், “நான் தாயிடம் தொலைபேசியில் பேசியபின்புதான் எனக்குள் நம்பிக்கையும், உற்சாகமும் வந்தது. என் தாயிடம் பேசியபின் என் மனதில் புதிய தெம்பு பிறந்தது. என் நோக்கம் முழுவதும் மறைந்த என் தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுவதுதான்.
இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பளித்த கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் தேசத்துக்காக ஆட வேண்டும் என்பது என் தந்தையின் ஆசை. இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் மிக மிக மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரின் ஆசிகள் எனக்கு இருக்கும் என்பதை உணர்கிறேன்.” என்றார்.