• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சிராஜ் அபாரம், டெஸ்ட்டில் முதல் 5 விக்., தாக்குர் பிரமாதம்: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 328 ரன்கள்- 294 ரன்களுக்கு மடிந்த ஆஸ்திரேலியா

சிராஜ் அபாரம், டெஸ்ட்டில் முதல் 5 விக்., தாக்குர் பிரமாதம்: இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 328 ரன்கள்- 294 ரன்களுக்கு மடிந்த ஆஸ்திரேலியா

சிராஜ். | படம்- ஐசிசி ட்விட்டர்.

சிராஜ். | படம்- ஐசிசி ட்விட்டர்.

ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சைனி, அஸ்வின் ஆகிய முக்கியப் பந்து வீச்சாளர்கள் காயமடைந்த நிலையில் பொறுப்பைச் சுமந்த முகமது சிராஜ், இதன் மூலம் தன்னை இந்திய அணியுடன் இணைபிரியா அங்கமாக தானே நிர்ணயித்துக் கொண்டார்.

  • Share this:
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் முதல் 5 விக்கெட்டை கைப்பற்றினார் சிராஜ்.

ஷர்துல் தாக்குர் மிகப்பிரமாதமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிராஜ் 19.5 ஓவர், 5 மெய்டன் 73 ரன்கள் 5 விக்கெட்டுகள், ஷர்துல் தாக்குர் 19 ஓவர் 2 மெய்டன் 61 ரன்கள் 4 விக்கெட்டுகள்.

ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சைனி, அஸ்வின் ஆகிய முக்கியப் பந்து வீச்சாளர்கள் காயமடைந்த நிலையில் பொறுப்பைச் சுமந்த முகமது சிராஜ், இதன் மூலம் தன்னை இந்திய அணியுடன் இணைபிரியா அங்கமாக தானே நிர்ணயித்துக் கொண்டார், உறுதி செய்து கொண்டார். அதே போல்தான் தாக்குர், சுந்தர் ஆகியோர் இடத்தையும் இனி ஒன்றும் செய்ய முடியாது.

அவர்களெல்லாம் திரும்பி வந்தால் இவர்கள் ஒருவேளை ‘காயமடையலாம்’!!

மார்கஸ் ஹாரிஸும், வார்னரும் இன்று இந்திய பவுலர்களின் சரியில்லாத லெந்த்தை நன்றாகப் பயன்படுத்தி சிலபல பவுண்டரிகளை அடித்து முதல்ல் விக்கெட்டுக்காக 89 ரன்களைச் சேர்த்தனர். ரன் விகிதமும் நன்றாகச் சென்று கொண்டிருந்தது. நடராஜன் ஒரே ஓவரில் 14 ரன்கள் விளாசப்பட்டார், இதனையடுத்து ஷர்துல் தாக்குர் பந்து வீச அழைக்கப்பட்டார். நவ்தீப் சைனியும் மைதானத்தில் இருந்தார். பிறகு வீசினார். ஆனால் வேகம் போய் விட்டது.

தாக்குர் நன்றாக வீசினார். ஹாரிஸ் 38 ரன்களில் 8 பவுண்டரிகள் அடித்து நன்றாக ஆடி வந்த போது மிடில் அண்ட் லெக்கில் நன்றாக குறிவைத்து ஷார்ட் பந்து ஒன்றை வீசினார் தாக்குர், ஹாரிஸ் குனிந்தார், ஆனால் கிளவ்வை இறக்கவில்லை. பந்து பட்டு பந்த்திடம் செல்ல கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது.

வார்னர் 75 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் திகழ்ந்தார். ஆனால் வாஷிங்டன் சுந்தர் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஸ்டம்பில் பிட்ச் செய்து நேராகச் செல்லுமாறு வீசினார், வார்னர் முன் காலை நகர்த்தி ஆடாமல் நின்ற இடத்திலேயே ஆடியதால் பந்து பீட் ஆகி பின் கால்காப்பைத் தாக்கியது பிளம்ப் எல்.பி.

2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் நின்று பிரயோஜனம் இல்லை என்று லபுஷேன் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடி 5 பவுண்டரிகளுடன் 22 பந்துகளில் 25 ரன்கள் என்று அபாயகரமாகத் திகழ்ந்தார் அப்போது சிராஜ் வந்தார். கூடுதல் பவுன்ஸ் ஆன பந்தை லபுஷேன் ஆடித்தான் ஆக வேண்டும் என்ற லெந்த் ஆடினார் ஆனால் பந்து எட்ஜ் ஆகி 2வது ஸ்லிப்பில் ரோஹித்திடம் கேட்ச் ஆனது. ஆஸி. 123/3.

அதே ஓவரின் கடைசி பந்தில் மேத்யூ வேட் (0) விக்கெட்டைக் கொடுத்தார். ஆம்; லெக் திசையில் சென்ற பந்தை தொட்டார், பந்திடம் கேட்ச் ஆனது. வெளியேறினார். சிராஜ் ஒரே ஓவரில் அபாரமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளினார்.

ஸ்மித்துக்கு ஒரே ஏத்து ஏத்தி பெவிலியன் அனுப்பிய சிராஜ்!

123/4 என்ற நிலையிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் (55), கேமரூன் கிரீன் (37) ஸ்கோரை 196 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். இருவரும் அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த போது சிராஜ் தன் வாழ்நாளின் மறக்க முடியாத ஒரு பந்தை வீசினார். ஜோப்ரா ஆர்ச்சரை நினைவுபடுத்தும் விதமாக ஒரு ஏத்து ஏத்தினார் ஸ்டீவ் ஸ்மித் பந்து நெஞ்சுயரத்தையும் தாண்டி எகிறியது ஸ்மித் எம்பி தடுக்கப் பார்த்தார் கிளவ்வில் பட்டு ரகானேவிடம் கேட்ச் ஆனது, ஆனால் தான் கிளவ்வை மட்டையிலிருந்து எடுத்து விட்டேன் என்று கூறி அவர் ரிவியூ செய்தார், பயனளிக்கவில்லை ஆட்டமிழந்தார். அபாரமான பந்து, சிராஜ் ஒரு முற்று முழுதான பவுலர் என்பதைத் தீர்மானிக்கும் தருணமாகும் இது .

டிம் பெய்ன் இறங்கியவுடனேயே ஸ்மித்தை வீழ்த்திய அதே எகிறு பந்தை வீச பெய்ன் தட்டுத்தடுமாறி அதை ஆட அருகில் பீல்டர்கள் இல்லாததால் தப்பினார்.

பெய்னும் கிரீனும் ஸ்கோரை 227 ரன்களுக்கு நகர்த்தினர். அப்போது 90 பந்துகளில் 37 என்று போராடி வந்த கிரீன் தாக்கூரின் எகிறு பந்தில் ரோஹித்திடம் 2வது ஸ்லிப்பில் எட்ஜ் செய்து வெளியேறினார். டிம் பெய்ன் 27 ரன்களில் தாக்கூரின் அபாரமான எகிறுபந்தை புல் ஆட முயன்று டாப் எட்ஜ் ஆகி பந்த்திடம் கேட்ச் ஆனார்.

ஸ்டார்க் (1), ஹேசில்வுட் (9) ஆகியோரை சிராஜ் வீழ்த்த நேதன் லயன் (13) விக்கெட்டை தாக்குர் காலி செய்தார், பாட் கமின்ஸ் சிராஜை ஒரு பெரிய சிக்சர் விளாசி 28 ரன்கள் எடுத்து ஒரு முனையில் தேங்கினார். ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு சுருண்டது. மொத்த முன்னிலை 327, இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 328 ரன்கள். அப்படி வென்றால் பிரிஸ்பனில் முதல் வெற்றியாகும் வரலாற்றுச் சாதனையாக அமையும்.

பிட்சில் உள்ள பிளவுகளை இந்திய பவுலர்கள் நன்றாகப் பயன்படுத்தினர். அதையே ஆஸி.யும் பயன்படுத்தினால் பந்துகள் எகிறும்.

இன்று இன்னமும் குறைந்தது 20 ஓவர்களாவது வீச வேண்டிய நிலையில் இந்தியா 4/0 என்று ஆடும் போது மழையால் ஆட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று அநேகமாக ஆட்டம் நடக்காது என்றே கூறி விடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: