விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரை போன்று இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பார் என்று இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக தொடக்க வீரர் சுப்மன் உருவாகி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில், இவர் மூன்று போட்டிகளில் 360 ரன்கள் குவித்தார். இது எந்த ஒரு இந்திய வீரரும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளில் எடுக்காத அதிகபட்ச ரன் ஆகும். இதே சாதனையை சர்வதேச அளவில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் ஏற்படுத்தி இருந்தார். அவரும் 3 போட்டிகளில் 360 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சாதனையை முறியடிப்பதற்கு இந்திய அணியின் சுப்மன் கில் ஒரேயொரு ரன்னில் தவறவிட்டார். இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 208 ரன்கள் குவித்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதையடுத்து அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள் உள்ளிட்டோர் பாராட்டுகளை கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரிம் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- சுப்மன் கில்லின் பேட்டிங்கை பலரும் பாராட்டியுள்ளனர். அவருடைய பேட்டிங் நாளுக்கு நாள் முதிர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. விளையாட்டில் அவர் மிகமிக கவனமாக இருக்கிறார். ஆட்டம் எப்படிப்பட்டது என்பதை அவர் நன்றாக உணருகிறார்.
பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் விதவிதமான ஷாட்களை அடித்து ரன்களை சேர்க்கிறார். ஒரு பந்தை எந்த திசையில் அடிக்க வேண்டும் என்கிற அவரது தேர்வுமுறை நன்றாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் சச்சினும், விராட் கோலியும் ஏராளமான சாதனைகளை ஏற்படுத்தியுள்ளனர். அந்த பெருமையை சுப்மன் கில் தாங்கிச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகள் மிகுந்த சவாலாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங்கிற்கு சுப்மன் கில் முதுகெலும்பாக இருப்பார் என்று நம்புகிறேன். மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்திய அணியில் திறமை வாய்ந்த இளம் வீரரை நான் பார்க்கிறேன். இன்னும் அவரை சவாலான ஆடுகளங்களில், சவாலான எதிரணி பந்து வீச்சாளர்களுடன் களம் இறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket