CRICKET SHREYAS IYER RULED OUT WITH SHOULDER INJURY WILL MISS ENTIRE IPL 2021 ARU
ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கம்!
ஸ்ரேயாஸ் ஐயர்
இங்கிலாந்துடனான முதல் ஒரு நாள் போட்டியில் காயம் அடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியுடனான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனே மைதானத்தில் மார்ச் 23ம் தேதியன்று நடைபெற்றது. இதில் ஃபீல்டிங் செய்த போது இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரது இடது தோள்பட்டை எலும்பு இடம் மாறியதால் அவருக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய தோள்பட்டை கடும் வலி ஏற்பட்டு தவித்து வருகிறார், விரைவில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. ஆபரேஷன் முடிந்து குறைந்தபட்சம் 4 மாதங்களுக்காவது அவர் ஓய்வு எடுக்க வேண்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் காரணமாக இங்கிலாந்துடனான எஞ்சிய 2 போட்டிகள் மட்டுமல்லாது வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்க இருக்கும் 14வது ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் இருந்து வருவதால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி அணி சென்னை அணியுடன் ஏப்ரல் 10ம் தேதி தனது முதல் போட்டியை ஆட உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட முடியாது என்பதால் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை யார் ஏற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம் என கூறப்படுகிறது. அவரும் இல்லை என்றால் ஷிகர் தவான் அல்லது ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டன் பொறுப்பை ஏற்கலாம்.
இங்கிலாந்துடனான முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர்த்து இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இருப்பினும் அவருடைய காயம் அவ்வளவு தீவிரமாக இல்லை என்று தெரியவந்துள்ளது. இதே போல இங்கிலாந்து அணியின் இயான் மார்கனுக்கும் காயம் ஏற்பட்டது.