தனது பயோபிக் படத்தை தொடர்ந்து எடுத்தால் தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் சோயப் அக்தர். இவர் அந்நாட்டு அணிக்காக 46 டெஸ்ட்,163 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவற்றில் டெஸ்டில் 178 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் போட்டி வரலாற்றில், அதிவேகத்தில் பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையும் சோயப் அக்தர் ஏற்படுத்தியிருக்கிறார்.
தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர், பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வீரர்கள் குறித்து கருத்துக்களையும் கூறி வருகிறார். இவரது கருத்துகள் பல முறை சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. இதற்கிடையே சோயப் அக்தரின் வாழ்க்கை வரலாற்று படமாக ‘ராவல்பின்டி எக்ஸ்பிரஸ்’ என்ற படம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த படக்குழுவினருடன் சோயப் அக்தர் இணைந்து பணியாற்றி வந்தார். இதற்கிடையே சில காரணங்களால் கடந்த ஜூலை மாதம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் படத்தில் இருந்து, அக்தர் விலகி விட்டார். இந்த சூழலில் அக்தரின் பயோபிக் படத்தை இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ராவல்பின்டி எக்ஸ்பிரஸ் படம் தொடர்பாக, அடுத்து என்ன நடவடிக்கை எடுத்தாலும் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’என்னுடைய பயோபிக் படமான ராவல்பின்டி எக்ஸ்பிரஸ் ஒரு கனவு திட்டம் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்காக பலரும் கடினமாக உழைத்து உள்ளார்கள். ஆனால் சில விஷயங்கள் சரியாக அமையாததால், இந்த படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன். ராவல்பின்டி படம் தொடர்பாக படக்குழுவினர் அடுத்து ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket