• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டிவி லைவ் ஷோவில் சோயிப் அக்தரை வெளியேற சொன்ன நெறியாளர் - வைரல் வீடியோ!

டிவி லைவ் ஷோவில் சோயிப் அக்தரை வெளியேற சொன்ன நெறியாளர் - வைரல் வீடியோ!

Shoib akhtar

Shoib akhtar

லைவ் ஷோவில், இந்த தேசத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன், பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்வதாக அக்தர் கூறிச்சென்றார்.

  • Share this:
டிவி லைவ் ஷோவில் அவமானப்படுத்தப்பட்டதால், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் பாதியில் வெளியேறிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இவர் உலகிலேயே வேகமாக பந்துவீசக் கூடியவர் என்பதால் அவரின் சொந்த ஊரை குறிப்பிட்டு ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். துபாயில் தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியா, நியூசிலாந்து என தனது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணி நேற்றைய தினம் நியூசிலாந்து அணியுடன் மோதியது, இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. போட்டி குறித்த நிகழ்ச்சி ஒன்று பாகிஸ்தான் தேசிய ஊடகமான பிடிவியில் லைவ் ஆக நடந்து கொண்டிருந்தது. போட்டி முடிந்த பின்னர் நடந்து கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சோயிப் அக்தர், உமர் குல், ரஷித் லத்திஃப், ஆகுப் ஜாவேத், ஜாம்பவான்களான சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சனா மிர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியை நவுமன் நியாஸ் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நெறியாளர் நவுமன் நியாஸுக்கும், சோயிப் அக்தருக்கும் இடையே ஒரு கேள்வி தொடர்பாக சர்ச்சை வெடித்தது. இதில் நெறியாளர், சோயிப் அக்தரை பாதிலேயே வெளியேறுமாறு கூறினார். இதனால் அங்கிருந்த பிரபலங்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சோயிப் அக்தர் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறினார்.நெறியாளர் நவுமன், நியூசிலாந்து உடனான போட்டி குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார், அப்போது அந்த கேள்விக்கு பதிலாக அப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர் ஹரிஸ் ரஃவுப்பை புகழ்ந்து பேசினார். அக்தர் பேசுகையில், ஹரிஸ் ரஃவுப் தான் இந்த வெற்றிக்கு சொந்தக்காரர், லாகூர் கலந்தர்ஸ் (பாகிஸ்தான் டி20 அணி) தான் நமக்கு ஹரிஸ் ரஃவுபை தந்தது. இவரை கண்டறிந்து, அவருக்கு ஆதரவு தந்த அந்த அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் ஆகிப் தான் இதற்கெல்லாம் காரணமானவர்.. என சோயிப் அக்தர் பேசிக் கொண்டிருந்த போது நெறியாளர் நவுமன் பாதியில் குறுக்கிட்டு, சோயிப்பை பார்த்து நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள். இதைக் கூற நான் விரும்பவில்லை, இருந்தாலும் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறலாம். இதனை நான் லைவ்-ல் கூறுகிறேன்” என தெரிவித்தார்.

Also read: கட்டிபிடிப்பது, படுக்கையறை, காதல் ஜோடிகளின் நெருக்கமான காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை!

தொகுப்பாளர் சோயிப்பை பார்த்து இப்படி கூறியபோது சோயிப், அங்கிருந்த பிரபலங்கள் என அனைவரும் ஒரு கணம் திகைத்து வாயடைத்துப் போயினர். பின்னர் தொகுப்பாளர் நிகச்சிக்கு இடைவேளை விடுவதாக தெரிவித்தார். இடைவேளைக்கு பிறகும் இந்த விவகாரம் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சோயிப் அக்தர், தனது மைக்கை கழற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். தான் வெளியேறும் முன்பாக அங்கிருந்த சக பிரபலங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நான் லைவ் ஷோவில், இந்த தேசத்திற்கு முன்னால் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன், பிடிவி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்வதாகவும் அக்தர் கூறிச்சென்றார்.இந்த விவகாரம் மற்றும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது. சோயிப் அக்தரை நெறியாளர் நடத்திய விதம் மிகவும் மோசமானது எனவும், இதற்காக சோயிப்பிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ரசிகர்கள் சோயிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Also read: ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் வெடித்து 5ம் வகுப்பு மாணவன் பலி!

இதனிடையே சோயிப் இச்சம்பவம் குறித்து விளக்கத்தை சமூக வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார். “சர் விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் கோவர் போன்ற ஜாம்பவான்கள் என் சமகாலத்தவர்கள், மூத்தவர்கள் மற்றும் மில்லியன் கணக்கான நேயர்கள் முன்னிலையில் இது நடந்திருப்பது மிகவும் சங்கடமாக இருந்தது.

என்னை அரங்கில் இருந்து வெளியேறச் சொல்லி நெறியாளர் அவமதித்த போது, உங்கள் பேச்சுக்காக மன்னிப்பு தெரிவித்தால் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவித்தேன், இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை, எனக்கு வேறு வழி தெரியவில்லை என அக்தர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

அக்தர் அரங்கை விட்டு வெளியேறிய போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரை மீண்டும் அழைக்கவோ ஆறுதல் சொல்லவோ இல்லை. அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கவனமாக இருந்தார், ஆனால் அங்கிருந்த பிரபலங்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: