நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து ஷிகார் தவான் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி வரும் 24ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் டி20 தொடரிலிருந்து ஷிகார் தவான் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியின் போது ஷிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டது.
தவான் ஃபில்டிங்கின் போது பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயற்சித்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த போட்டியில் களமிறங்கவில்லை. காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
தவான் தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 2 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இரண்டு போட்டிகள் முறையே 96 மற்றும் 74 ரன்கள் குவித்திருந்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து தவான் விலகினால் இந்திய அணிக்கு அது சற்று பலவீனத்தை ஏற்படுத்தும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.