• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • சச்சின் சாதனையை தகர்த்த உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டர் 'ஷகிப்-அல்-ஹசன்'

சச்சின் சாதனையை தகர்த்த உலகின் நம்பர் 1 ஆல்-ரவுண்டர் 'ஷகிப்-அல்-ஹசன்'

ஷிகப்-அல்-ஹசன்

ஷிகப்-அல்-ஹசன்

ICC World Cup 2019 | Shakib al hasan | உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஷகிப்-உல்-ஹசன் நிகழ்த்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதிற்கு உரித்தானவர்  ஷகிப்-அல்-ஹசன் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு எவராலும் மறக்க முடியாத ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார்.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி 9 லீக் ஆட்டங்களில் 3 போட்டிகளில் வெற்றிபெற்றது.  5 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி மழையால் பாதிப்பு என ஏழு புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இருப்பினும் அனைத்து நாடுகளும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சற்று சுதாரிப்புடன் விளையாடியதற்கு ஷகிப்-அல்-ஹசன் என்ற ஒற்றை வீரர் தான் காரணம்.



எட்டு போட்டிகளில் விளையாடி 606 ரன்கள் குவித்து உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன் சச்சின், மேத்யூ ஹெய்டன் ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் உலகக் கோப்பை லீக் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் சாதனையை ஷகிப்-உல்-ஹசன் முறியடித்துள்ளார். 2003 உலகக் கோப்பை தொடர் லீக் போட்டிகளில் சச்சின் 586 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. நடப்பு உலகக் கோப்பையில் ஷகிப்-அல்-ஹசன் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.



அத்துடன் இரண்டு சதம், ஐந்து அரைசதம் விளாசி ஏழு போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் குவித்து சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். வங்கதேசம் வென்ற மூன்று போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று லீக் போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் மட்டும் ஜொலிக்கவில்லை அல்-ஹசன், விளையாடிய அனைத்து போட்டிகளி பந்துவீசி 11 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்து தான் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதையும் நிரூபித்தார்.



606 ரன்கள், 11 விக்கெட்டுகள், 3 கேட்ச் என உலகின் நம்பர் ஒன் ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்துக்காட்டிய ஷகிப் அல் ஹசன் 2019 உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர நாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: