என்னது 25 வருஷத்துல 28 வயது ஆகிவிட்டதா? - ஷாகித் அஃப்ரீடியை கடும் கிண்டலடித்த ரசிகர்கள்

ஷாகித் அஃப்ரீடி

ஒருமுறை ஜெஃப்ரி பாய்காட் வர்ணனை செய்து கொண்டிருந்த போது அஃப்ரீடி 17 வயது வீரர் என்று யாரோ கூற, அஃப்ரீடிக்கு 17 வயதுதான் என்றால் எனக்கு 28 வயதுதான் என்று  கடுமையாகக் கிண்டல் செய்தது நினைவுகூரத்தக்கது.

 • Share this:
  பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி ஞாயிறன்று தன் 44வது பிறந்த நாளைக் கொண்டாடினார். 2021 பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டித் தொடரில் அவர் முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு ஆடி வருகிறார்.

  இதற்கிடையே ரசிகர்கள் அவரது வயதை வைத்து கடுமையாக அவரை கேலி செய்தனர்.

  ஏனெனில் அவரது சுயசரிதையின் படி ஷாகித் அஃப்ரீடியின் வயது இப்போது 46. ஆனால் முன்னணி இணையதளங்கள் கூகுளின் படி அவரது வயது 41, ஆனால் அஃப்ரீடி தானே தனக்கு வயது 44 என்று நேற்று பிறந்த தினத்தின் போது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

  பலரும் எத்தனை வருஷமா 44 வயசு பிரதர், எப்படியோ போகட்டும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்களை கிண்டல் கேலியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

  இன்னொரு ரசிகர் உங்கள் கணக்குப் படி 1996ம் ஆண்டு 16 வயதில் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானீர்கள் ஆனால் அதன் பிறகு 25 ஆண்டுகளில் 28 வயதாகிவிட்டதா என்ன? என்ன பிரதர் என்று கேட்டு கிண்டலடித்துள்ளார்.

  ஐசிசியின் படி ஷாகித் அப்ரீடி மார்ச் 1 1980ல் பிறந்தவர். ஆனால் அவர் தன் சுயசரிதையில் தான் பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகும் போது வயது 19 என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் 1975-ல் பிறந்ததாக தன் சுயசரிதையில் அவர் குறிப்பிட்டிருந்தார், அப்படிப்பார்த்தால் அவரது வயது இப்போது 46 ஆக இருக்க வேண்டும்.

  அவர் வயது குறித்த சர்ச்சைகள் எப்போதும் ஓயாது, அது இருந்த படியேதான் இருக்கும், ஆனால் உண்மையான வயது என்னவென்பது புரியாத புதிர்தான்.

  ஒருமுறை ஜெஃப்ரி பாய்காட் வர்ணனை செய்து கொண்டிருந்த போது அஃப்ரீடி 17 வயது வீரர் என்று யாரோ கூற, அஃப்ரீடிக்கு 17 வயதுதான் என்றால் எனக்கு 28 வயதுதான் என்று  கடுமையாகக் கிண்டல் செய்தது நினைவுகூரத்தக்கது.

  ஷாகித் அஃப்ரீடி 27 டெஸ்ட் போட்டிகள், 398 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 99 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட்டில் 1716 ரன்களையும் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 8064 ரன்களையும் டி20-யில் 1416 ரன்களையும் எடுத்துள்ளார்.

  கடைசியாக 2016-ல் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்காக ஆடினார்.  ஓய்வு அறிவித்து விட்டு மீண்டும் இருமுறை வந்த அப்ரீடி கடைசியாக 2016 டி20 உலகக்கோப்பை முடிந்ததும் ஓய்வு அறிவித்து விட்டார்.
  Published by:Muthukumar
  First published: