இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷாபாஸ் நதீம், தனது முதல் சர்வதேச விக்கெட்டை எடுத்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
நேற்றைய இரண்டாவது நாள் தேனீர் இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. 5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், முகமது சமி மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பாவுமாவின் விக்கெட்டை சூப்பராக நதீம் எடுத்தார்.
இந்திய அணி 335 ரன்கள் முன்னிலை எடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது. இதையடுத்து பாலோ-ஆன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது. தற்போது, தேநீர் இடைவெளி வரை 9.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது.
இந்த போட்டியில் 30 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் இந்திய அணியில் அறிமுகமானார். தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட அவர், 15 ஆண்டுகளாக காத்திருந்துள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு தனது 15 வயதில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆன நதீம், சிறப்பான பந்து வீச்சால் தலைசிறந்த பந்து வீச்சாளரானார்.
கடந்த மூன்று ரஞ்சி டிராபி சீசனில் அதிகளவில் விக்கெட் வீழ்த்தினார், என்றாலும் இந்தியா அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்முறை தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Also See...
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.