பாய்ஸ் கட் ஹேர்ஸ்டைல், கம்பீர தோற்றம், இறங்கி அடிக்கும் தோனி...! யார் இந்த ஷஃபாலி வெர்மா..?

”நடப்பு மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மூலம் உலகம் முழுவதும் உச்சரிக்கும், ஒலிக்கும் குரல் இளம் புயல் ஷஃபாலி வெர்மா”

  • Share this:
பாய்ஸ் கட் ஹேர்ஸ்டைல், கம்பீர தோற்றம், கடுகளவு கூட களத்தில் பயமில்லா கண்கள், எதிர்வீசும் பந்துவீச்சாளரை இறங்கி அடித்து துவம்சம் செய்யும் இளம் புயல் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய அணியின் லேடி  சேவாக் என்று அழைக்கப்படும் ஷஃபாலி வெர்மா குறித்து பார்க்கலாம்.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியதற்கு இளம் புயல் ஷஃபாலி முக்கிய காரணம் என்றே சொல்லலாம்.

16வயதான இந்த இளம் வீராங்கனை குறித்து தான் தற்போது உலகமே வாயடைத்து வியந்து போய் நிற்கின்றது.  கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே அனைவரையும் தன் பெயரை உச்சரிக்க வைத்திருக்கிறார் ஷஃபாலி.  நாங்க நாலு பேரு, எங்களுக்கு பயம்னா என்னன்னே தெரியாது, என்ற வசனத்தை இந்த ஒற்றை வீராங்கனைக்கு சமர்ப்பிக்கலாம்.

4 பேருக்கு இணையான கம்பீரத்தை களத்தில் வெளிப்படுத்துவது ஷஃபாலிக்கு இயற்கையிலே உள்ளது.
ஓவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் பிடித்த துறையில் அவர்கள் பயணித்து வந்த விதம் என்னவோ கடுமையானது தான். அதுபோல் தான் ஷஃபாலிக்கும். 2004 ஜனவரி 28ல் ஹரியானாவில் பிறந்த ஷஃபாலி வெர்மா, சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் பயிற்சி பெற தொடங்கினார்.வெர்மா இந்திய அணிக்கு கிடைத்த நம்பிக்கை நட்சத்திரம் என்ற எண்ணம் ஒரு கண்காட்சி போட்டியின் மூலம் இந்தியா அறிந்தது. ஆம், 2019-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதியில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் விளையாடிய வெர்மா அனைவராலும் கவனம் பெற்றார்.
அந்த கண்காட்சி போட்டிதான் வெர்மாவின் கிரிக்கெட் பயணத்தின் திருப்புமுனை என்று சொல்லலாம்.

முதன் முதலாக, இந்திய அணிக்காக டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய  வெர்மாவின் பெயர் சேர்க்கப்பட்டது. அங்கிருந்து தொடங்கியது ஷஃபாலி வெர்மாவின் ரன் மழை பயணம். செப்டம்பர் 24, 2019ல் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தை தொடங்கிய வெர்மா, நவம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான 5 டி20 போட்டியை சேர்த்து 158 ரன்கள் குவித்து ஆட்டநாயகி விருதை அலங்கரித்தார்.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் அரைசதத்தை பதிவு செய்த வெர்மா, இந்தியாவுக்காக குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற உச்சத்தையும் தொட்டார்.
16 வயதில் சச்சின் இந்திய அணிக்காக அரைசதம் அடித்ததே குறைந்த வயதில் அடித்ததாக பார்க்கப்பட்டது. அதனை முறியடித்து தன்னுடைய 15 வயதிலேயே அரைச் சதத்தை எட்டினார் வெர்மா.அவரது இந்த ஆட்டமே, உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு தேர்வாக வைத்தது. உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டுமென்ற ஒவ்வொரு வீரரின் கனவை போலவே, வெர்மாவுக்கும் இருந்த உலகக்கோப்பை கனவு, நிஜமானது. இளம் வீராங்கனை வெர்மாவுக்கு முதல் உலகக்கோப்பை தொடர் இதுவாகும். உலகக்கோப்பையில் விளையாடுபவர்களோ அனுபவம் உடையவர்கள். வெர்மாவின் உலகக்கோப்பை பயணம் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு சற்றும் சளைக்காமல் தனது பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பதிலாக விளாசினார்.

முதல் லீக் ஆட்டமே 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன். சளைக்காமல் 15 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29ரன்களை சேர்த்தார்.  வங்கதேச அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் என 39 ரன்கள் குவித்து அமர்களப்படுத்தியதோடு, ஆட்டநாயகி விருதையும் வென்றார்.  நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3வது லீக் ஆட்டத்தில் எதிரணி பந்துவீச்சாளர்களின் கவனம் முழுவதும் ஷஃபாலி மீதே இருந்தது. இருப்பினும், பந்துவீச்சாளர்கள் கண்ணில் மண்ணை தூவிய ஷஃபாலி, 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 46ரன்கள் சேர்த்து, 2வது முறையாக ஆட்டநாயகி விருதை வென்றதோடு, இந்தியா அரையிறுதிக்கு முன்னேறவும் முக்கிய வீராங்கனையாக இருந்தார்.

இலங்கைக்கு எதிரான 4வது லீக் ஆட்டத்திலும் வெர்மாவின் ருத்ரதாண்டவம் தொடர்ந்தது. பவுண்டரிகளை நோக்கி பந்தை விரட்டிய வெர்மா இதில் 47ரன்கள் எடுத்தார்.
இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடியுள்ள ஷஃபாலி 161 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். பேட்டிங்-ல் பிடித்தது சச்சின், விக்கெட் கீப்பிங்-ல் பிடித்தது தோனி என கூறியிருக்கும் ஷஃபாலி, இந்திய மகளிர் அணியின் சேவாக பார்க்கப்படுகிறார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு இந்த "லேடி சேவாக்" ஆணிவேர் என்றே சொல்லலாம். மிடில் ஆர்டரில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி, அரையிறுதியில் ஷஃபாலியின் ஆட்டத்தை மிகவும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
எதிரணி யாராக இருந்தாலும், தன் பாணியில், பயமில்லாமல் இறங்கி வந்து அச்சுறுத்தும் ஷஃபாலியின் ஆட்டத்தை அரையிறுதியிலும் பார்ப்பதற்கு ஆர்வமோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இதுவரை ஒருமுறை கூட வாகை சூடியதில்லை. இந்த முறை லேடி சேவாக் வருகையும், அதிரடியும் இந்த வரலாற்றை மாற்றி எழுதுமா? வெர்மா மூலம் இந்தியாவிற்கு உலகக்கோப்பை கிடைக்குமா? 1983க்கு பிறகு 2011ல் தோனி இந்திய அணிக்கு பெற்றுத்தந்த உலகக்கோப்பை இந்நாளும் எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ, அந்த வரலாற்று கொண்டாட்டத்தை நோக்கி காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள்.
Published by:Vijay R
First published: