ஹர்திக் பாண்டியா எனும் ஆல்ரவுண்டர் என்பது நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் நிலையில் அவரது பேட்டிங்கும் ஐயத்துக்கு இடமாகி வருகிறது. அணியின் ஆலோசகரான எம்.எஸ்.தோனி மட்டும் ஆதரிக்கவில்லை எனில் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பை அணியிலேயே இருந்திருக்க மாட்டார் என்று தேர்வுக்குழு வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன.
ஹர்திக் பாண்டியாவை இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்தது பெரிய விவாதமாக உருவெடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் என்று உள்ளே நுழைந்து பியூர் பேட்டராக அவர் ஆடி வருகிறார், ஆனால் பியூர் பேட்டராக ஆட இவரை விடவும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர். பவுலிங் வீசினால்தான் ஹர்திக் பாண்டியா அணியில் இருக்கத் தகுதியானவர் என்று பலரும் கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.
ஆனால் இப்போது கசிந்த தகவல்களின் படி எம்.எஸ்.தோனி உண்மையில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை மீது நம்பிக்கை வைத்து உத்தரவாதம் அளித்ததாகவும் அதனால் அவர் அணியில் தேர்வு செய்யப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்றி இது தொடர்பாக வெளியான செய்தியில், அணித்தேர்வுக்குழு உண்மையில் ஹர்திக் பாண்டியாவை வீட்டுக்கு அனுப்பவே முடிவு எடுத்தனர் என்றும் தோனிதான் பாண்டியாவின் பினிஷிங் திறமைகளைச் சுட்டிக்காட்டி அவர் வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத நபர் ஒருவரின் ஆதாரம் ஒன்றை மேற்கோள் காட்டி அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அக்சர் படேல், வெங்கடேஷ் அய்யர், தீபக் சாகர் போன்றோரை அணியில் எடுத்து பாண்டியாவை வீட்டுக்கு அனுப்பும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கிய நிலையில் தோனிதான் ஹர்திக் பாண்டியாவைக் காப்பாற்றியுள்ளார் என்கிறது அந்தச்செய்தி அறிக்கை.
இது தொடர்பாக முன்னாள் செலெக்டர் வெங்சர்க்கார் கூறும்போது, உடல் கூறு ஆய்வாளர்கள், பிசியோ, உடல் பயிற்சியாளர், மற்ற பயிற்சியாளர், கேப்டன், ஆகியோர் பாண்டியாவின் நிலையை மதிப்பிட்டிருப்பார்கள், என்றார்.
மற்றொரு செலெக்டர் சந்தீப் பாட்டீல், “பாண்டியாவை தேர்வு செய்தது அணியின் கேப்டனுக்கும் பிசிசிஐக்கும் தான் வெளிச்சம். ஐபிஎல் தொடர் முழுதும் பாண்டியா வீசவில்லை எனும்போது தேர்வுக்குழு முடிவெடுத்திருக்க வேண்டும். பிட்னெஸ் டெஸ்ட் வைத்துத்தான் அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும். யாராவது பொறுப்பாக பேச வேண்டும், ரவிசாஸ்திரியிடமிருந்து இது தொடர்பாக ஒரு வார்த்தையும் இல்லை. ரோகித் சர்மாவும், ரகானேவும் கூறுகின்றனர் பாண்டியா ஃபிட் என்று, இவர்கள் எப்படி கூற முடியும்?போட்டியின் போது பாண்டியா அன் ஃபிட் ஆனாரா? இதுசாதாரண தொடர் அல்ல, உலகக்கோப்பை” என்று சந்தீப் பாட்டீல் கடுமையாகச் சாடினார்.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.