சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான நடராஜன் தங்கராஜ். சின்னப்பம்பட்டி வீதிகளில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நடராஜன், 15 ஆண்டு விடா முயற்சியால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி சாதனை பயணத்தை தொடங்கியுள்ளார். ஐ.பி.எல்.கிரிக்கெட் தொடரில் யார்க்கர் நாயகனாக ஜொலித்த நடராஜன், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கான நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்படவே, நடராஜனுக்கு இந்த வாய்ப்பு கைகூடியது.
அதன்பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நடராஜனுக்கு முதல் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுக போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனைதொடர்ந்து டி20 போட்டிக்கான இந்திய அணியில் களம் கண்ட நடராஜன், தனது அசாத்திய திறமையாலும், துல்லியமான யார்க்கர் பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.
முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை சாய்த்த நடராஜன், இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களை வெளியேற்றி மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார். இறுதியாக இந்திய அணி டி20 தொடரை வென்று வரலாற்றுச்சாதனை நிகழ்த்தியது. தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியா இவ்விருது நடராஜனுக்குத்தான் பொருத்தமானது என கூறி, கோப்பையை நடராஜனுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் சாம்பியன் கோப்பையை வாங்கிய கேப்டன் கோலி, நடராஜன் கையில் கொடுத்து அழகுபார்த்தார்.
இந்தநிலையில், போட்டி முடித்து வர்ணனையாளர் முரளி கார்த்திக்குடன் தமிழில் உரையாடிய நடராஜன் நெட் பவுலராக வந்து சிறந்த வீரராக சாதித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். பேட்ஸ்மேன் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டாலும், விக்கெட் எடுத்தாலும் புன்னகை சிந்தும் ரகசியத்தையும் நடராஜன் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட்டை உயிர்மூச்சாக கொண்டு, நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமான நடராஜனின் சாதனை பயணம் சிறக்க வாழ்த்துகிறது நியூஸ் 18 தமிழ்நாடு.