HOME»NEWS»SPORTS»cricket sa vs srilanka anrich nortje demolishes srilanka elgar on 92 at the end of the first day mut

86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை ‘மார்ச் ஃபாஸ்ட்’: நோர்ட்யா வேகத்துக்கு 157 ரன்களுக்கு சுருண்டது

ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் 148/1 என்று வலுவான நிலையில் உள்ளது, 148 ரன்களில் டீன் எல்கர் மட்டுமே 119 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து கிரீசில் இருக்கிறார்.

86 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை ‘மார்ச் ஃபாஸ்ட்’: நோர்ட்யா வேகத்துக்கு 157 ரன்களுக்கு சுருண்டது
6 விக். வீழ்த்திய ஆன்ரிச் நோர்ட்யா.
  • Share this:

ஜொகான்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 157 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்சில் சுருண்டது.

ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்சில் 148/1 என்று வலுவான நிலையில் உள்ளது, 148 ரன்களில் டீன் எல்கர் மட்டுமே 119 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து கிரீசில் இருக்கிறார், இவருடன் வான் டெர் டியூசன் 40 ரன்களுடனும் இருக்கிறார்.

கிரீன் டாப் பிட்சில் இலங்கை  அணி தைரியமாக பேட்டிங் எடுத்து அதே தைரியத்தை ஆட்டத்திலும் காட்டியது. குசல் பெரேரா வெளுத்து வாங்கினார், ஒரு மினி ஜெயசூரியாவாக அவர் 67 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கும் போது இலங்கை அணி 21வது ஓவரில் 71/2 என்று இருந்தது, இவரது விக்கெட்டையும் சேர்த்து அடுத்த 86 ரன்களில் வரிசையாக 9 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களுக்கு சுருண்டது.



வேகப்பந்து வீச்சாளர் நோர்ட்யா 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, ஸ்விங் பவுலர் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இடது கை ஸ்பின்னர் மஹராஜ் பவுலிங் செய்ய வேண்டிய தேவையில்லாமல் போனது.

முல்டரின் பந்தில் குசல் பெரேரா கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜனவரி 2020-ல் நோர்ட்யே இதே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக 5 விக்கெட்டுகளை எடுத்தார், இப்போது இதே மைதானத்தில் இரண்டாம் முறை.

இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னேயின் அறுவையான 32 பந்து 2 ரன்கள் அணிக்கு நன்மை செய்யவில்லை, நோர்ட்யே அவரை வீழ்த்தினார். இலங்கை அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களான சந்திமால், தனஞ்ஜய டிசில்வா காயத்தினால் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்கள் லாஹிரு குமாரா, கசுன் ரஜிதா ஆகியோரும் காயத்தினால் ஆடவில்லை.

முல்டர் உணவு இடைவேளைக்கு முன்னதாக 1 ரன்னிற்கு  3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். மொத்தம் 4 விக்கெட்டுகளை 13 ரன்களில் இழந்த இலங்கை 84/5 என்று ஆனது.
உணவு இடைவேளைக்குப் பிறகு நோர்ட்யா 2வது ஓவரில் நிரோஷன் டிக்வெலாவை (7) காலி செய்தார். குவிண்டன் டி காக் இடது புறம் பாய்ந்து அபார கேட்ச் எடுத்தார். இது நேற்று டி காக் பிடித்த 5 கேட்ச்களில் ஒன்றாகும்.

தாசுன் ஷனகாவையும் நோர்ட்யா வீழ்த்த இலங்கை மிக மோசமாக சரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.  ஆனால் ஹசரங்கா (29), சமீரா (22) இணைந்து 39 ரன்களை அதிரடியாகச் சேர்த்தனர். பிறகு வேகப்பந்து வீச்சாளர் லூதோ சிபாம்லா, ஹசரங்காவை வீழ்த்த, சமீராவை நோர்ட்யா வீழ்த்தினார். அசிதா பெர்னாண்டோ ஸ்டம்புகள் சிதற நோர்ட்யா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 157 ரன்களுக்கு இலங்கை காலியானது.

தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுக ஸ்விங் பவுலர் அசிதா பெர்னாண்டோ அய்டன் மார்க்ரம் (5) விக்கெட்டை நல்ல பந்தில் வீழ்த்தினார்.  ஆனால் ஒரு முனையில் டீன் எல்கரை அசைக்க முடியவில்லை. 92 நாட் அவுட், டியூசன் 40 நாட் அவுட். தென் ஆப்பிரிக்கா 148/1. இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெறும்.
Published by:Muthukumar
First published: