தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விக்கு பின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி ட்விட்டரில் அறிவித்தார். விராட் கோலியின் இந்த முடிவு யாரும் எதிர்பாராத நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “7 ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது. என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன். எதுவுமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர வேண்டும், என்னை பொறுத்தவரையில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. எனது கேரியரில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் என்றுமே அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை..
நாட்டுக்காக வழிநடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அணி வீரர்களுக்கு பெரிய நன்றி. உங்களால் இந்த பயணம் மிகவும் அழகானதாகவும், நினைவுகளோடும் கடந்தது. எனக்கு உறுதுணையாக இருந்த ரவி சாஸ்திரி பெரிய நன்றி. இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கு ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன். எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்.” இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி பதவி விலகியது குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி20 கேப்டன் ரோஹித் சர்மா தனது கருத்தை பதிவிட்டு உள்ளார். அதில், Shocked!! என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் அதிர்ச்சி தான், ஆனாலும் இந்திய கேப்டனாக வெற்றிகரமாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கடந்த டிசம்பரில் ஒரு நாள் அணி கேப்டனிலிருந்து கோலி விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.