• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • முஷ்பிகுர் அவுட் என்று தெரிந்தும் ரிவியூ கேட்கவில்லையா? ரோஹித் சர்மா விளக்கம்

முஷ்பிகுர் அவுட் என்று தெரிந்தும் ரிவியூ கேட்கவில்லையா? ரோஹித் சர்மா விளக்கம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலையை எட்டியுள்ளது. அத்துடன், இருபது ஓவர் போட்டியில் முதல் முறையாக இந்திய அணியை வென்றுள்ளது.

    இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, மூன்று போட்டிகளை கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இது ஆயிரமாவது போட்டியாக அமைந்தது.

    டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டத்தை தொடர்ந்தனர். இப்போட்டி ரோஹித்துக்கு 99-வது சர்வதேச ஆட்டமாக அமைந்தது. இதன் மூலம் அதிக போட்டியில் விளையாடிய இந்திய வீரர் என, தோனியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார். மேலும், முதல் ஓவரிலேயே 9 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

    இருந்த போதும், டி-20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரரர்களில் 2 ஆயிரத்து 252 ரன்களுடன், விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். இப்போட்டியில் வங்கதேச அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும், சற்று நிலைத்து ஆடிய தவான், 41 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்தார்.

    கடைசிக் கட்டத்தில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குர்ணால் பாண்டியா சற்று அதிரடியாக ஆடியதால், இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

    இலக்கை விரட்டிய வங்கதேச அணியில், தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கைகோர்த்த முகமது நைம், சவுமியா சர்கார் பொறுப்பாக ஆடிய அணியின் ரன் வேகத்தை உயர்ந்தினர்.

    அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹிம் அரைசதம் கடந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 19.3 ஓவர்களில் வங்கதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.

    டி-20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடியுள்ள வங்கதேசம் முதல் முறையாக வெற்றியை ருசித்தது. அத்துடன், 1-0 என்ற விகிதத்தில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இப்போட்டியில், 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்து முஷ்பிர் ரஹிம் ஆட்டநாயகனாக தேர்வானார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி, வருகின்ற வருகின்ற 7-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.

    இந்தப் போட்டியில் வெற்றிக்கான வாய்ப்புகளை இந்திய அணி நழுவவிட்டது. 10-வது ஓவரை சாஹல் வீசிய நிலையில், இரண்டு பந்துகள் முஷ்பிகுரின் காலில் பட்டன. வீரர்கள் அவுட் கேட்ட நிலையில், நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆனாலும், இந்திய கேப்டன் டி.ஆர்.எஸ் மூலம் ரிவியூ கேட்கவில்லை.

    முதல் பந்து முஷ்பிகுரின் காலில் பட்டதும் ரோஹித் சர்மா, விக்கெட் கீப்பர் பந்த் மற்றும் பவுலர் சாஹலிடம் பேசினார். ஆனால், ரிவியூ கேட்கவில்லை. வீடியோ ரிப்ளே பார்க்கும் போது அது சரியாக அவுட் என்று தெரிய வந்தது. அப்போது, முஷ்பிகுர் 6 ரன்களே எடுத்திருந்தார். ரிவியூ கேட்டிருந்தால், அவர் வெளியே சென்றிருப்பார். போட்டி நம் வசமாகியிருக்கும்.

    அடுத்து முஷ்பிகுர் 38 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை குணால் பாண்ட்யா நழுவவிட்டார். பந்து அவர் கையில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இந்த தவறுகளும் பங்களாதேஷ் அணிக்கு சாதகமாக மாறி ஆகிவிட்டது.

    அடுத்ததாக சவுமியா சர்காரின் காலில் பந்து பட, ரிஷப் பந்த் ரிவியூ கேட்க ரோஹித்திடம் கூறினார். ஆனால், அது அவுட் இல்லை. இதனை அடுத்து, பந்தை பார்த்து ரோஹித் நக்கலாக சிரித்தார்.



    “நாங்கள் எடுத்தது போதுமான ஸ்கோர்தான். ஆனால், பீல்டிங்கில் செய்த தவறுகளால் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். தவறு எங்கள் பக்கம்தான். இதெல்லாம் பாடம். இதில் இருந்துதான் கற்றுக்கொள்வோம். பங்களாதேஷ் அணி, சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுவிட்டது. டி-20 போட்டிகளுக்கு சாஹல் முக்கியமான வீரர். அவரது முக்கியத்துவம் மிடில் ஓவர்களில் தெரிந்தது. அவர் நம்பிக்கையுடன் ஆடினார்’’ என்று போட்டிக்கு பின் ரோஹித் சர்மா பேசினார்.

    ரிவியூ முடிவுகள் குறித்து கேட்ட போது, “ரிவியூ முறையை நாங்கள் தவறாக கையாண்டுள்ளோம். முஷ்பிகுரின் உயரத்தை நாங்கள் மறந்துவிட்டோம்” என்று கூறினார்.

    வங்கதேசத்திடம் தோல்வியடைந்த இந்தியா... வைரல் மீம்ஸ்



    Also See...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: