3வது ஒருநாள் போட்டியில் சதக்கூட்டணி அமைத்த ரோகித் சர்மா-ஷிகர் தவான் கூட்டணி தொடக்க ஆட்டக்காரர்களுக்கான சில சாதனைகளை முறியடித்துள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று 3வது கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது, இதில் இந்தியா முதலில் பேட் செய்து
ரிஷப் பந்த், பாண்டியா, ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆட்டங்களில் 329 ரன்கள் குவித்தது, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் கரன் அற்புதமாக ஆடி 95 நாட் அவுட் என்று திகழ்ந்தார். கடைசி ஓவரை
நடராஜன் அற்புதமாக வீச 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்று தொடரை 2-1 என்று இழந்தது.
ஆட்ட நாயகனாக சாம் கரனும் தொடர் நாயகனாக ஜானி பேர்ஸ்டோவும் தேர்வு செய்யப்பட்டனர், ஆல்ரவுண்ட் திறமை காட்டிய
ஷர்துல் தாக்கூர், சிறந்த பவுலிங் வீசிய புவனேஷ்வர் குமாருக்கு நாயக விருதுகள் கிடையாதா என்று கோலி அதிருப்தியுற்றார்.
இந்நிலையில் புனேயில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து 3வது ஒருநாள் போட்டியில் நிகழ்ந்த சில சாதனைகளைப் பார்ப்போம்:
ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் தொடக்க ஜோடிகளாக 17 முறை சதக்கூட்டணி அமைத்தனர். இந்த வடிவத்தில் இது 2ம் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் எந்த ஒரு சதக்கூட்டணியிலும் 4வது இடம் பிடித்துள்ளனர் ரோகித்-தவான். 14வது ஓவரில் இந்த 17வது சதக்கூட்டணி அமைந்தது, இது இவர்கள் கூட்டணியிலேயே விரைவு கதியில் ரன்கள் சேர்க்கப்பட்ட இன்னிங்ஸ் ஆகும்.
அதே போல் ரோகித்-தவான் ஜோடி 5000 ரன்களை கூட்டணி மூலம் சேர்த்துள்ளனர், 6 ஜோடிகள்தான் இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.
ஒருநாள் சதக்கூட்டணியில் கங்குலி- சச்சின் டெண்டுல்கர் கூட்டணி 176 இன்னிங்ஸ்களில் 26 சதக்கூட்டணி அமைத்து முதலிடத்தில் உள்ளனர். தில்ஷன் சங்கக்காரா 108 இன்னிங்ஸ்களில் 20 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். கோலி-ரோகித் சர்மா இணைந்து 81 இன்னிங்ஸ்களில் 18 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர்.
தவான் - ரோகித் சர்மா இணைந்து 17 சதக்கூட்டணியை 112 இன்னிங்ஸ்களில் அமைத்துள்ளனர். கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன் கூட்டணி 17 இன்னிங்ஸ்களில் 16 சதக்கூட்டணி அமைத்துள்ளனர்.