இந்திய அதிரடி பேட்டர்-விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் வெறும் குறைந்த ஓவர் கிரிக்கெட்டை மட்டும் ஆடிக்கொண்டிருந்தால் அவர் விரைவில் மறக்கப்பட்டு விடுவார், கிரிக்கெட்டின் என்றும் அழியாத வடிவமான டெஸ்ட் போட்டிகளில் 100 போட்டிகளில் ஆடிவிட்டால் அவரது பெயர் கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்களில் பொறிக்கப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
சேவாக் தன் புதிய பாணி ஆட்டத்தினால் டெஸ்ட், ஒருநாள், டி20 என்று பாரபட்சம் பார்க்காமல் யாராக இருந்தாலும் அடித்து நொறுக்கும் டைப். அவர் மட்டும் இன்னும் கொஞ்ச நாட்கள் டெஸ்ட்டில் ஆடியிருந்தாலோ அல்லது இடையில் அசட்டுத்தனமாக அவரை தூக்காமல் இருந்தாலோ அவர் 10,000 டெஸ்ட் ரன்களைக் குவித்திருப்பார், அவரது இப்போதைய சராசரியான 49.34 என்பது 50-ஐக் கடந்திருக்கும்.
ஆனாலும் சேவாகின் முக்கியமான பங்களிப்பாக அவரது முச்சதங்கள், இரட்டைச் சதங்கள் பேசப்பட்டாலும் அவரது முக்கியமான பங்களிப்பு அதுவரை தொடக்க வீரர்களில் ஒருவர் சடுதியில் ஆட்டமிழந்தால் ராகுல் திராவிட் புதிய பந்தை எதிர்கொள்ளத் திணறி நின்று மிக மெதுவாக ஒரு இன்னிங்ஸை ஆடுவார், சில சமயங்களில் எதிர்முனையில் சச்சின் டெண்டுல்கர் திராவிட் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யாமல் ஆடியதற்கு பல முறை களத்திலேயே தன் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
காரணம் ஒரு முனையில் இவர் சிங்கிள் எடுக்காமல் ஆடிக்கொண்டிருந்தால் இன்னொரு முனையில் கிளென் மெக்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்ளும் போது ஒர்க் அவுட் செய்து விடுவார்கள். ஆகவே ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய வேண்டும். இப்படியாக ஆடி சுவர் என்ற பட்டத்தையும் பெற்ற ராகுல் திராவிட், சேவாக் ஓப்பனிங்கில் இறங்கி புதிய பந்தை அடித்து நொறுக்க ஆரம்பித்த பிறகே ஒன் டவுனில் திராவிட் அதிக அளவில் சீராக ரன்களையும் சதங்களையும் எடுத்தார் என்பதற்கு புள்ளி விவர ஆதாரங்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் லஷ்மண் ஆடிய அந்த மராத்தான் இன்னிங்ஸில் அவருடன் ஆடிய ராகுல் திராவிட் 180 ரன்களை எடுத்த போது 3ம் நிலையில் லஷ்மண் தான் இறக்கப்பட்டார்.
உண்மையில் கங்குலி செய்த இன்னொரு பெரிய மாற்றம் அப்போது லஷ்மணை 3ம் நிலையில் இறக்கி திராவிட்டை 5ம் நிலைக்குக் கொண்டு சென்றார். பிறகு லஷ்மண் தொடர்ந்து ஆக்ரோஷமாக ஒன் டவுனில் ஆடினார், ஆனால் பெரிய ஸ்கோர்களை எடுக்காமல் ஸ்டார்ட் நன்றாக செய்து அவுட் ஆகி விடுவார், இதனையடுத்து மீண்டும் திராவிட்டை 3வது டவுனுக்குக் கொண்டு வரும்போது சேவாக் தொடக்கத்தில் இறங்கத் தொடங்கியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அதன் பிறகுதான் திராவிட் நம்பர் 3-ல் பெரிய பேட்டரானார். 2004 ஆஸ்திரேலியா தொடரில் சேவாக் தொடக்கத்தில் இறங்கி சாத்தி எடுத்த பிறகுதான் திராவிட் வந்து பெரிய இன்னிங்ஸை ஆடினார். சேவாகை ட்ராப் செய்த போதும் அந்த 11 மாதங்கள் திராவிட்டின் ஸ்கோரை எடுத்துப் பார்த்தாலும் இது புரியும். மீண்டும் சேவாக் வந்த பிறகும் இது புரியும்.
ராகுல் திராவிட்டே சேவாகின் தாக்கம் பற்றி சில பேட்டிகளில் கூறியுள்ளார்.
இப்போது ரிஷப் பண்ட்டை ஆடம் கில்கிறிஸ்ட் என்று கூறி உசுப்பேற்றி வருகின்றனர். தோனியை முதலில் அப்படித்தான் சொன்னார்கள், ஆனால் அவர் நான் அதெல்லாம் இல்லை, எனக்கு கரியர் முக்கியம் என்று தன் ரோலை முடிவு செய்து கொண்டார், அதற்கு அவர் கேப்டனானது கைக்கொடுத்தது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதங்களை முக்கியமான கட்டங்களில் எடுத்துள்ளார், இதில் கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் பந்துகள் எகிறும் பிட்சில் எடுத்தது உண்மையில் அபாரமான சதம், கடினமான சதம்.
இந்நிலையில் விரேந்திர சேவாக், ரிஷப் பண்ட் குறித்து சேவாக் ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறும்போது, “ரிஷப் பண்ட் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் என்றால் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறுவார். 11 வீரர்கள்தான் இந்தியாவில் இதை சாதித்துள்ளார், அவர்களை பெயர்களை நாம் இன்று கூற முடியும்.
விராட் கோலி ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் தெரியுமா? ஏனெனில் 100-150 டெஸ்ட்கள், ஏன் 200 டெஸ்ட்களை ஆடினார் என்றால் ரெக்கார்ட் புக்குகளில் அவர் பெயரை யாரும் அழிக்க முடியாது, நீங்கா இடம்பெறும், எனவே ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Dravid, Rishabh pant, Virender sehwag