ரிஷப் பந்த் விளையாடவில்லை என்றாலும் எங்களுடன் இருந்தாலே போதும் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். முதற்கட்ட சிகிச்சையை வெற்றிகரமாக முடித்த அவர் சமீபத்தில் தான் டேராடூனில் இருந்து மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இன்னும் 4 வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெறும் என தகவலளிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த நிலையில் குறைந்தது ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட முடியாது என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ரிஷப் பந்த் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் ஐஐசி ரிவ்யு என்ற நிகழ்ச்சியில் ரிஷப் பந்த் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ரிஷப் பந்த் போன்ற வீரர்களுக்கு உங்களால் அவ்வளவு எளிதில் மாற்று வீரரை கண்டுபிடிக்க இயலாது. அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக இருக்கும். கடந்த முறை அவர் ஆஸ்திரேலியாவிற்கு வந்த போது என்ன செய்தார் என்பது தெரியும். எனவே முக்கிய போட்டிகளில் ரிஷப் பந்த் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமையும்” என தெரிவித்தார்.
மேலும் ஐபிஎல் குறித்த கேள்விக்கு, “ரிஷப் பண்ட் பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு தயாராகிவிட்டால் போதும், ஐபிஎல் போட்டிகளின் போது டக் அவுட்டில் எனக்கு அருகில் அமர்ந்திருக்க வேண்டும். மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லி கேப்பிடல்ஸ் முகாம் தொடங்கப்படும். அப்போது இருந்து அனைத்து நாட்களிலும் ரிஷப் பண்ட், என்னுடம் பயணம் செய்ய விரும்புகிறேன். அவர் இருந்தாலே போதும்” என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்பதால் டெல்லி அணியின் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கேப்டன்சியில் அதிக அனுபவம் கொண்ட வார்னர், ஐபிஎல் தொடரிலும் 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்றுக்கொடுத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BCCI, Indian cricket team, IPL, Rishabh pant