ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரவி சாஸ்திரி கூறிய அந்த வார்த்தைகள்: உடைந்து நொறுங்கிய அஸ்வின்

ரவி சாஸ்திரி கூறிய அந்த வார்த்தைகள்: உடைந்து நொறுங்கிய அஸ்வின்

ரவி சாஸ்திரி, அஸ்வின்

ரவி சாஸ்திரி, அஸ்வின்

குல்தீப் யாதவ்வை புகழ்ந்தது தன்னை நொறுக்கி விட்டது என்று அஸ்வின் கூறுவது இன்னும் முதிர்ச்சியடையா ஒரு மனோபாவம் என்றே தெரிகிறது. சரி, இது தொடர்பாக அஸ்வின் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தன்னை அனைவரும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது குழந்தைகளின் மனோபாவம், பலருக்கும் இது வயது முதிர்ச்சியடைந்த பின்பும் தொடருவது சகஜம், இதிலிருந்து வெளிவருவது கடினம் ஆனால் இந்த மனோபாவத்திலிருந்து நாம் வெளியே வரவில்லை எனில் அது நம்மை பதம் பார்த்துவிடும் என்பதற்கு உதாரணமாக அஸ்வின் சொன்ன இந்த விஷயத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

இப்படிப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில்தான் இந்தியாவின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, சொன்ன ஒரு வார்த்தை அஸ்வினை உடைத்து நொறுக்கி விட்டதாம். இந்தியாவில் அஸ்வின் மேட்ச் வின்னர், அயல்நாடுகளில் தேவையான பொழுதில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார், ஆனால் அங்கு அவர் மேட்ச் வின்னர் கிடையாது, ஆனால் குல்தீப் யாதவ் சிட்னியில் எடுத்த எடுப்பிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனையடுத்து குல்தீப் யாதவ் அயல்நாடுகளில் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர் என்று ரவிசாஸ்திரி புகழ்ந்து கூறினார். இது அஸ்வினை உடைத்து நொறுக்கி விட்டதாம். சகவீரர்களின் வெற்றியை நம் வெற்றியாகப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள், ஆனால் தனக்கென்று வரும்போது அந்த உன்னத நோக்கங்களெல்லாம் காற்றில் பறந்து விடும் போலும்.

குல்தீப் யாதவ்வை புகழ்ந்தது தன்னை நொறுக்கி விட்டது என்று அஸ்வின் கூறுவது இன்னும் முதிர்ச்சியடையா ஒரு மனோபாவம் என்றே தெரிகிறது. சரி, இது தொடர்பாக அஸ்வின் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

“ரவி சாஸ்திரி மீது எனக்கு உயரிய மரியாதை உண்டு. எங்கள் அனைவருக்குமே உண்டு. நாம் முதலில் சில வார்த்தைகளை கூறுவோம் பிறகு அதிலிருந்து பின் வாங்குவோம், இதுவும் புரிகிறது. ஆனால் குல்தீப் யாதவ் நம்பர் 1 ஓவர்சீஸ் ஸ்பின்னர் என்று கூறிய அந்தத் தருணம் என்னை உடைத்து நொறுக்கி விட்டது. குல்தீப் யாதவுக்காக நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். என்னால் 5 விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை, குல்தீப் யாதவ் எடுத்தார். அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதும் எனக்குத் தெரியும்.

நான் நன்றாக வீசினாலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றவில்லை என்பது ஒரு குறைதான். நான் உண்மையிலேயே குல்தீப் யாதவுக்காக மகிழ்கிறேன். ஆஸ்திரேலியாவில் வெல்வது மிக மிக மகிழ்ச்சியான தருணம். ஆனால் நான் அவருடைய வெற்றியில் பங்கேற்கும் போது, அணி அதை கொண்டாடும்போது நான் அந்த இடத்துக்குரியவன் என்பதை நான் உணர வேண்டும். ஆனால் என்னை ஒருமாதிரி மட்டம் தட்டி விட்டால் நான் எப்படி பார்ட்டியில் கலந்து கொள்ள முடியும். சக வீரரின் வெற்றியை என்னால் கொண்டாட முடியும்?

நான் என் அறைக்குச் சென்று என் மனைவியிடம் பேசினேன், குழந்தைகளும் அங்கு இருந்தனர். இதனை எப்படியோ உதறி விட்டு விருந்தில் கலந்து கொண்டேன், கடைசியில் எது எப்படியானாலும் நாங்கள் பெரிய தொடரை வென்றோம்.

முதல் டெஸ்ட்டில் வென்றதில் பெரிய பங்களிப்பு செய்தேன். முதல் டெஸ்ட்டே பிறகு தொலைதூர நினைவாகி விட்டது, நான் முதல் 4 விக்கெட்டுகளில் 3-ஐ கைப்பற்றினேன். நாமும் நிறைய ரன்களை எடுக்கவில்லை. பிறகு பிட்ச் பிளாட் ஆன போது இறுதி இன்னிங்சில் என்னுடைய அப்டமன் வலியிலும் நான் நிறைய ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தேன். அணிக்காக மிகப்பெரிய விஷயத்தைச் செய்ததாக நான் என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நான் என் காதில் கேட்டதெல்லாம், ‘நேதன் லயன் 6 விக்கெட்டுகள் எடுத்தார், அஸ்வின் 3தான் எடுத்தார் என்பதே. எனக்கு இந்த ஒப்பிடுதலே பிடிக்காது. இந்த ரியாக்‌ஷம் பிறகு சிட்னியில் குல்தீப் 5 விக்கெட் எடுத்தது பற்றிய பேச்சுக்கள் யாவும் நான் ஏதோ எந்த வித பங்கும் ஆற்றாதது போலவேதான் இருந்தது’ என்றார் அஸ்வின்.

குழந்தைகள் எது செய்தாலும் பெற்றோர் விதந்தோதி புகழ்வது உலகம் முழுதும் உள்ள பழக்கம்தான், ஆனால் இது குழந்தைகளின் மனதில் ஆழமாக பதிந்து முதிர்ச்சியடைந்த பின்பும் உலகம் நம்மை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற சாத்தியமில்லாத விருப்பத்தை வளர்த்துக் கொள்வதிலும் அது நடக்காத போது உலகின் மீது வெறுப்படைதலும் ஆன ஒரு மனநிலையை கொடுத்து விடும். இதை விட ஆபத்தானது நம்மை விட சிறப்பாக செயல்படுபவர்கள் மீது பொறாமை ஏற்பட்டு அது நட்புறவையே கெடுக்கும், அஸ்வினின் இந்த மனநிலையே அதற்கு உதாரணம் எனலாம்.

குல்தீப் யாதவ் சிறப்பாக வீசினார், நேதன் லயன் சிறப்பாக வீசினார் என்று புகழ்ந்தால் அது தான் நன்றாக வீசவில்லை என்று அவர்கள் கூறுவதாக நினைப்பது தற்காதல், தற்புகழ்ச்சி, சுய ஆராதனை, சுய-கர்வம் என்ற நார்சிச அடியாழ மனோபாவம் என்பதோடு கழிவிரக்கம், மனக்கசப்பு (resentment) என்ற மோசமான தன்னிரக்க மறுபக்கம் கொண்டது, அதாவது சுய ஆராதனை நார்சிசம் என்பதும் கழிவிரக்கம், தன்னிரக்கம், சுயவெறுப்பு, பிறவெறுப்பு என்பதும் ஒரே காகிதத்தில் இரு பக்கங்களே. இது ஆரோக்கியமான மனநிலைக்கு எதிரி என்றே உளவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

First published:

Tags: Kuldeep Yadav, R Ashwin, Ravi Shastri