தோனியின் எதிர்காலம் இதுதான்! தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஓபன் டாக்

எம்.எஸ்.தோனி

உலகக் கோப்பை தொடருக்கு பின் அவர் விளையாடவில்லை. அவர் விளையாட ஆர்வமாக இருந்தால் நிச்சயமாக தேர்வாளர்களுக்கு தெரியப்படுத்துவார் - ரவிசாஸ்திரி

  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு 3 விதமான உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திரசிங் தோனி. உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இந்திய ராணுவத்தில் 2 மாதங்கள் பயிற்சி பெற உள்ளதாக கூறி விலகினார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. தோனி ஆர்வம் காட்டவில்லை என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். இதனிடையே தோனி ஓய்வு அறிவிக்க உள்ளதாக பல வதந்திகள் சுற்றி வந்தன. ஆனால் தோனி ஓய்வு குறித்தும் அணியில் இடம்பெறுவது குறித்தும் எந்த விதமான தகவலும் இதுவரை வெளியிடவில்லை.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இந்து நாளிதழ்க்கு அளித்த பேட்டியில் தோனியின் எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அதில், “இந்திய அணிக்கு திரும்புவது குறித்து தோனி தான் முடிவு செய்ய வேண்டும். உலகக் கோப்பை தொடருக்கு பின் நான் அவரை சந்திக்கவில்லை.

அவர் முதலில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்க வேண்டும். அதற்குபின் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். எனக்கு தெரிந்து உலகக் கோப்பை தொடருக்கு பின் அவர் விளையாடவில்லை. அவர் விளையாட ஆர்வமாக இருந்தால் நிச்சயமாக தேர்வாளர்களுக்கு தெரியப்படுத்துவார்“ என்றார்.

மேலும் தோனி இந்திய அணியில் இடம்பிடிக்க தேர்வாளர்களிடம் விருப்பம் தெரிவித்தாலும் உள்ளூர் போட்டிகளில் முதலில் விளையாடி தனது திறனை நிரூபித்த பின்னே அணியில் இடம்பிடிக்க முடியும் என கூறப்படுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு பின் தோனி ராஞ்சி கோப்பை, விஜய் ஹாசரே கோப்பை என எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் உள்ளார்.

Also Watch

Published by:Vijay R
First published: