ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை வென்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக விளங்கும் ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காலிறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா அணியும், பஞ்சாப் அணியும் தகுதி பெற்றன. முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி 87 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுனில் படேல் 70 ரன்களும், பார்த் பட் 111 ரன்களும் எடுத்தனர்.
பஞ்சாப் அணியில் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும், பல்தேஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து பஞ்சாப் அணி முதல் இன்னிங்சை தொடங்கி 431 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்க வீரர்கள் பிராப் சிம்ரன் 126 ரன்களும், நமன் தீர் 131 ரன்களும் எடுத்தனர். கேப்டன் மன்தீப் 91 ரன்கள் குவித்தார். 128 ரன்கள் பின் தங்கிய நிலையில் சவுராஷ்டிரா அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 379 ரன்களில் அந்த அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் வீரர்கள் விளையாடத் தொடங்கினர்.
இதில் சவுராஷ்டிர அணியின் அற்புதமான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 89.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 71 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ரஞ்சி கோப்பையின் அரைறுதி போட்டிகள் வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி வரும் 16 ஆம் தேதி ஆரம்பம் ஆகிறது. கர்நாடகம், வங்கம், மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அரையிறுதியில் பெங்கால் அணி மத்திய பிரதேசத்தையும், கர்நாடகா அணி சவுராஷ்டிராவையும் எதிர்கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket