இந்தியா-தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாகவே நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவான் இந்திய அணியில் வீரராகக் கூட இடம்பெறாததற்குக் காரணம் ராகுல் திராவிட் தான் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் ஷிகர் தவானிடம் இது குறித்து முன் கூட்டியே திராவிட் கூறியும் விட்டார் என்றார் அவர்.
ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 450க்கும் மேலாக ரன்களை எடுத்துள்ளார். 450க்கும் மேலாக ரன்களை ஷிகர் தவான் 7வது முறையாக ஐபிஎல் தொடரில் எடுக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 460 ரன்கள் எடுத்தார், கடைசி லீக் போட்டியில் கூட 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்களை விரைவு கதியில் விளாசினார், ஆனால் பாவம் அவர் கேப்டன்சியிலிருந்து நேராக அணியிலிருந்தே தூக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்தான் ஷிகர் தவான் இந்திய டி20 அணியின் கேப்டன், ஹர்திக் பாண்டியா வைஸ் கேப்டன் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஷிகர் தவான் வேண்டாம், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று ராகுல் திராவிட் சொன்னதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
“ஷிகர் தவான் இந்திய கிரிக்கெட்டுக்கு பல ஆண்டுகளாக சேவையாற்றி வருபவர்தான், ஆனால் டி20 கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராகுல் திராவிட் ஷிகர் தவானை ட்ராப் செய்யும் கடினமான முடிவை தெரிவித்தார், நாங்களும் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அணி அறிவிப்பதற்கு முன்பே ராகுல் திராவிட் ஷிகர் தவானிடம் அவர் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பதைத் தெரிவித்து விட்டார்” என்றார் அந்த அதிகாரி.
அதாவது டி20 உலகக்கோப்பை திட்டங்களில் ஷிகர் தவான் இல்லை என்று இதிலிருந்து தெளிவாகிறது. ஆனால் இஷான் கிஷனை இவர்கள் நம்புவதுதான் கொடுமை, அவர் சீரியசான கிரிக்கெட் ஆட்டத்திற்கு தகுதியுடையவர்தானா என்பதே நம் சந்தேகம்.
இன்னொரு சந்தேகம் ஒரு பயிற்சியாளர் என்பவர் கொடுக்கப்படும் கேப்டன், அணியை வைத்து பயிற்சிதான் அளிக்கலாமே தவிர அணித்தேர்வு, கேப்டன் தேர்வில் எல்லாம் அவர் தலையிட முடியுமா என்பது தெரியவில்லை, தன் ஆலோசனையை வழங்கலாமே தவிர ஒருவரை வேண்டாம், வேண்டும் என்று அவர் முடிவெடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.