மந்தமான பிட்ச்சில் முதல் 2 நாட்களுக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை: தோல்வியை அடுத்து விராட் கோலி ஒப்புதல்

விராட் கோலி

கடைசியில் மனநிலைதான் முக்கியம். எப்படி மீண்டெழுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று விராட் கோலி சூளுரைத்துள்ளார்.

 • Share this:
  சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்கள் எடுத்தது, இந்திய அணி 337 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இரு அணிகளும் 200 ரன்களுக்குள் சுருண்டது. எனவே முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்டதுதான் தவறாகிப் போனது. அணித்தேர்வு முதல் டாஸ் வரை கோலிக்கு அனைத்தும் எதிராகப் போனது.

  இந்நிலையில் 227 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையில் இந்திய அணியை இங்கிலாந்து வீழ்த்தி 30 புள்ளிகள் பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் அட்டவணையில் நியூஸிலாந்தை 2ம் இடத்துக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது இங்கிலாந்து. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளதால் 4ம் இடத்தில் இருக்கும் இந்திய அணியும் தன் வாய்ப்பை இழந்து விடவில்லை.

  இந்நிலையில் மீண்டும் கோலி வந்து இந்திய அணி தோல்வி முகம் கண்டது குறித்து அவரே கூறும்போது, “இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்காமல் போய்விட்டோம்.

  ரன்களைக் கட்டுப்படுத்தி இன்னும் கொஞ்சம் அழுத்தத்தை அதிகரித்திருக்க வேண்டும், அதைச் செய்யாமல் விட்டோம். முதல் 2 நாட்களில் பிட்ச் மிகவும் மந்தம் முதல் 2 நாட்களுக்கு எதுவுமே நடக்கவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு பாராட்டுக்கள். பிட்சை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பெரிய ரன்களை முதல் இன்னிங்ஸில் குவித்தனர்.

  யாருக்கு பெருமை சேர வேண்டுமோ அதை உரிய அணிக்கு சேர்ப்பிப்போம் அதே வேளையில் நாங்களும் டீசன்ண்டாகவே ஆடினோம். இங்கிலாந்து அணி தொழில் நேர்த்தியை வெளிப்படுத்தினர். நமது பந்து வீச்சு இன்னமும் துடிப்புடன் செயல் பட வேண்டியுள்ளது.

  ஒரு அணியாக நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் பாடம் கற்று வருகிறோம். டெஸ்ட் கிரிக்கெட் நம்மைச் சக்கையாக பிழிந்து விடும். இங்கிலாந்து அதற்குத் தயாராக இருந்துள்ளது. நல்ல உடல் மொழியுடன் தொடங்கி களவியூகத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியில் மனநிலைதான் முக்கியம். எப்படி மீண்டெழுவது என்பது எங்களுக்குத் தெரியும்.

  ஆம். பந்த் களத்தில் எப்போதும் வேடிக்கையாக சில விஷயங்களைச் செய்வார் (ஸ்லெட்ஜிங்), அதுதான் அவரது ஆளுமை. அது அணிக்கு உதவவே செய்கிறது. அவர் நிறைய ஆற்றலை அணியிடத்தில் கொண்டு வருகிறார்.

  இவ்வாறு கூறினார் விராட் கோலி.
  Published by:Muthukumar
  First published: