ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆட்டத்தை மாற்றிய டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்.. பவுலிங்கில் மிரட்டிய நீஷம் - ஜேஎஸ்கே-க்கு பதிலடி கொடுத்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்

ஆட்டத்தை மாற்றிய டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்.. பவுலிங்கில் மிரட்டிய நீஷம் - ஜேஎஸ்கே-க்கு பதிலடி கொடுத்த பிரிட்டோரியா கேபிடல்ஸ்

வெற்றி பெற்ற பிரிட்டோரியா கேபிடல்ஸ்

வெற்றி பெற்ற பிரிட்டோரியா கேபிடல்ஸ்

டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்டை கைப்பற்றியதில் திறமையைவிட அதிர்ஷ்டம்தான் இருந்தது என நீஷம் கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaSouth AfricaSouth AfricaSouth Africa

செஞ்சுரியன் ஏஸ்ஏ டி 20 கிரிக்கெட் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நீஷம் தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் 3 ஓவர்களை வீசி 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனாக தேர்வானார். மேலும் அணியின் வெற்றிக்கு இவரது பந்துவீச்சு பக்கபலமாக இருந்தது.  இந்தப்போட்டிக்கு பின்னர் பேசியர், “டு பிளெஸ்ஸிஸ் விக்கெட்டை கைப்பற்றியதில் திறமையைவிட அதிர்ஷ்டம்தான் இருந்தது. அந்த விக்கெட்தான் ஆட்டத்தின் போக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றியது. நாங்கள் முன்னேறிச் செல்ல வழிவகுத்தது. இதுபோன்ற விஷயங்கள் நிகழும் என்றார்.

மேலும் பேசியவர், “எங்களிடம் புதிய பந்தில் நம்ப முடியாத வகையில் செயல்படக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து பந்து வீசுவது என்பது பெருமையாக உள்ளது. நேற்று முன்தினம் இதே அணிக்கு எதிராக நாங்கள் விளையாடிய விதம் ஏமாற்றம் கொடுத்தது. நாங்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக விளையாடி இருக்கலாம். ஆனால் அடுத்த 12 மணி நேரத்தில் மீண்டும் நாங்கள் விளையாடியது எங்களுக்கு சாதகமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் எங்களுக்கு நிறைய விஷயங்கள் கிடைத்துள்ளன” என்றார்.

செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 15.4 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஈத்தன் போஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து லியுஸ் டூப்ளாய் களமிறங்க டு பிளெஸ்ஸிஸ் அதிரடியாக விளையாடினார். டூப்ளாய் 12 பந்துகளில், 14 ரன்கள் எடுத்த நிலையில் மைகல் பிரிட்டோரியஸ் பந்தை தூக்கி அடித்து வெளியேறினார்.

அதிரடியாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் 22 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசிய நிலையில் நீஷம் பந்தில் பில் சால்ட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 6.1 ஓவர்களில் 70 ஆக இருந்தது. இதன் பின்னர் சூப்பர் கிங்ஸ் ஆட்டம் கண்டது. எஞ்சிய 7 விக்கெட்களையும் கொத்தாக 52 ரன்களுக்கு தாரைவார்த்தது.  பிரிட்டோரியா கேபிடல்ஸ் சார்பில் அன்ரிக் நார்கியா, நீஷம் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

123 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியானது 13 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான பில் சால்ட் 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வில் ஜேக்ஸ் 34, தியுனிஸ் டி பிரைன் 0, ரீலி ரோஸோவ் 11, ஷேன் டட்ஸ்வெல் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி போனஸ் புள்ளியையும் பெற்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் தோல்வி அடைந்திருந்தது. இந்த தோல்விக்கு தற்போது அந்த அணி பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அந்த அணி 4 ஆட்டங்களில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி பலபரிட்சை நடத்துகின்றன.இந்த போட்டியை ஜியோ சினிமா செயலி, ஸ்போர்ட்ஸ் 18, ஸ்போர்ட்ஸ் 18 கேல் மற்றும் கலர்ஸ் தமிழ் சானலில் காணலாம்.

First published:

Tags: Cricket, Faf du Plessis, IPL, Tamil News