மலையாளத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷ்யம் திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த மொழிகளிலும் இப்படம் ரசிகர்களிடையே அதிகளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதிகளவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாவது பாகம் வெளியாகும்போது அதிக அளவில் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே இருக்கும். இந்த எதிர்பார்ப்பை பெரும்பாலான படங்கள் பூர்த்தி செய்வது இல்லை. ஆனால், த்ரிஷ்யம் 2 பல ட்விஸ்டுகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இதனால், பிற மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே, த்ரிஷ்யம் 2 திரைப்படத்தின் இயக்குநரான ஜீத்து ஜோசப் தெலுங்கு ரீமேக்கிற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாபநாசம் 2 என்ற பெயரில் இப்படம் தமிழில் ரீமேக்காகவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
த்ரிஷ்யம் 2 திரைப்படம் தொடர்பான மீம்ஸ்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. பொதுமக்கள் மட்டுமல்லாது பிற துறை பிரபலங்களும் இந்த திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திர அஸ்வின் த்ரிஷ்யம் 2 திரைப்படம் தொடர்பான தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
&
அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், ``த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் நீதிமன்றத்தில் ஜார்ஜ் குட்டி ஏற்படுத்திய திருப்பத்தை நினைத்து சத்தமாக சிரித்தேன். நீங்கள் விரும்பினால் மீண்டும் த்ரிஷ்யம் முதல் பாகத்தில் இருந்து படத்தை பார்க்கத் தொடங்குங்கள். Fabulous!! Just fabulous” என்று தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்