லாகூர் டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான நேற்று ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 391 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் ஆட்ட முடிவில் 90/1 என்று உள்ளது. இந்த டெஸ்ட்டில் சதமெடுக்காவிட்டாலும் ஸ்டீவ் ஸ்மித், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடித்தார்.
இந்த போட்டியில் 59 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் முதல் 150 இன்னிங்சில் ஸ்டீவ் ஸ்மித் 7,993 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் முதல் 150 இன்னிங்சிற்கு பிறகு 7,913 ரன்கள் எடுத்த இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா, இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (7,869) ஆகியோர் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் வீரேந்திர சேவாக் (7,694), ராகுல் டிராவிட் (7,680 ) ஆகியோர் அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும் ரிவர்ஸ் ஸ்விங்கில் அசத்திய நசீம் ஷா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 7 ரன்களில் வெளியேறினார். அதே நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய லபுசேன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ட்ராவிஸ் ஹெட் மீண்டும் 26 ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பி விட்டார்.
206/5 என்ற நிலையில் ஒன்று சேர்ந்த கேமரூன் கிரீன் (79), அலெக்ஸ் கேரி (67) ஆகியோர் 6வது விக்கெட்டுக்காக 135 ரன்களைச் சேர்த்தனர். பாகிஸ்தான் அணியில் ரிஸ்வானின் விக்கெட் கீப்பிங் படுமோசம் 13 பைகளை அவர் விட்டார். உதிரி ரன்கள் 25 என்று வர ஆஸ்திரேலியா 391 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து இறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹக் 11 ரன்களில் கமின்ஸிடம் எல்.பி. ஆனார். ஆனால் மேலும் சேதமேற்படாமல் அப்துல்லா ஷபீக் 45, அசார் அலி 30 ஆகியோர் ஆடிவருகின்றனர். 90/1.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.