லாகூரில் நடைபெறும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது. அலெக்ஸ் கேரி 8 ரன்களுடனும் கேமரூன் கிரீன் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அஃப்ரீடி, நசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளையும் சஜீத் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மீண்டும் உஸ்மான் கவாஜா மிகச்சிறப்பாக ஆடி 91 ரன்கள் எடுத்தார். சதம் நிச்சயம் எனும் தருணத்தில் சஜீத் கான் பந்து ஒன்று எதிர்பார்த்ததை விட அதிகம் திரும்ப எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் பாபர் அசாம் மிக அருமையாக டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் எடுக்க கவாஜா வெளியேறினார். முன்னதாக 7 ரன்களில் டேவிட் வார்னர், ஷாஹின் ஷா அஃப்ரீடி பந்தில் எல்.பி.ஆனார். அதே ஓவரில் மார்னஸ் லபுஷேன் கோலி மாதிரியே வெளியே செல்லும் பந்தை ட்ரைவ் ஆடச்சென்று ரிஸ்வானிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆக ஆஸ்திரேலியா 8/2 என்று தடுமாறியது.
அப்போது கவாஜாவுடன் ஸ்மித் (59) சேர்ந்தார், இருவரும் சேர்து 138 ரன்கள் சேர்த்தனர். ஸ்டீவ் ஸ்மித் பிரமாதமாக ஆடி வருகிறார் ஆனால் சதம் மட்டும் அவருக்கு லபிக்கவில்லை. கோலி போலவே... ஆனால் கோலி நன்றாக ஆடுவதில்லை. ஸ்மித் நன்றாக ஆடுகிறார், இதுதான் வித்தியாசம். கோலி தானாகவே அவுட் ஆகிறார், அல்லது அவரை போட்டு எடுக்கின்றனர் என்று கூறலாம், மாறாக ஸ்டீவ் ஸ்மித்திற்கு ரவிசாஸ்திரி, ரஹானே கூட்டணி மேற்கொண்ட அதே பாணியை மற்ற அணிகளும் ஃபாலோ பண்ணத் தொடங்கி விட்டன.
அதாவது ஸ்மித் ஆஃப் ஸ்டம்பில் நகர்ந்து கொண்டு பவுலர்களுக்கு எல்.பி. ஆசையைக் காட்டி, லெக் திசையில் ரன்களைக் குவித்து வந்தார், இப்போது அந்த வாசல் அடைக்கப்பட்டு விட்டது, அனைவரும் லெக் திசையில் பீல்டர்களை பேக் செய்கின்றனர். இதனால் ஸ்மித்தின் சரளம் குறைந்து போனது. பாகிஸ்தானுக்கு எதிரானதொடரில் 78,72, 59 ஸ்மித்தின் ஸ்கோர், மூன்றுமே வேறு சமயமாக இருந்தால் ஸ்மித்தின் சதங்களாக மாறியிருக்கும்.
நேற்றும் அவர் எல்.பி.ஆனார், காரணம், அந்த லெக் திசை சபலம்தான், ஷஃபுல் செய்கிறார் பந்து மாட்டவில்லை எனில் நேராக கால்காப்புத்தான், எல்.பி.தான். முன்பு தொட்டதெல்லாம் துலங்கியது, இப்போது தொட முடியவில்லை ஸ்மித்தினால். கடந்த 14 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஸ்மித் அடிக்கும் 7வது அரைசதமாகும் இது. சதம் அவரை விட்டு நழுவிச் சென்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 29 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரேயொரு சதம்தான் ஸ்மித் எடுத்துள்ளார்.
நேற்று முதல் 15 பந்துகளில் 3 அபாரமான ட்ரைவ்களில் 3 பவுண்டரிகளை விளாசினார். 27 பந்துகளில் 19 என்று ஸ்மித் வந்த போது அவரது உடல் மொழி பழைய மாதிரியாக இருந்தது, உடனே ஆஸ்திரேலிய ஊடகங்கள் தலைப்பை ரெடி செய்து விட்டன, ஆனால் அந்தோ பரிதாபம் மீண்டும் 59-ல் வெளியேறினார்.
இந்தத் தொடக்கத்துக்குப் பிறகு ஸ்மித் மீண்டும் குகைக்குள் சென்றார் சுமார் 4 ஓவர் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. ஒரு கேட்சும் டிராப். 18வது ஓவரில் நவ்மன் அலியை இறங்கி வந்து தூக்கி அடித்த 5வது பவுண்டரியுடன் 51வது ஓவர் வரை பவுண்டரி அடிக்க முடியவில்லை. இப்படியாக அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைந்து கொண்டே வருகிறது, இப்போது ஸ்மித் ஆடிவரும் ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் சதமெடுக்க வேண்டுமெனில் 245 பந்துகள் தேவைப்படும்.
அணிகள் லெக் திசையில் பீல்டர்களை நெருக்கமாக அமைத்து அவரை நெருக்கி வருகின்றன, ஸ்மித் தன் பேட்டிங் உத்தியை மாற்றினாலேயன்றி அவர் தன் பழைய சரளமான பேட்டிங்குக்குத் திரும்புவது கடினமே.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan Vs Australia, Steve Smith