பாக்.ஐ நொறுக்கி மிகப்பெரிய இன்னின்ஸ் வெற்றி : டெஸ்ட்டில் நம்பர் 1 இடம் பிடித்த நியூஸிலாந்து- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்

பாக்.ஐ நொறுக்கி மிகப்பெரிய இன்னின்ஸ் வெற்றி : டெஸ்ட்டில் நம்பர் 1 இடம் பிடித்த நியூஸிலாந்து- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்

பாகிஸ்தானை வீழ்த்தி நம்பர் 1 இடம்பிடித்த நியூஸிலாந்து.

முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து அணி. 

  • Share this:
கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற 2வதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 176 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேன் வில்லியம்சன் தலைமை நியூஸிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணி என்ற இடத்துக்கு முன்னேறியது.

முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது நியூஸிலாந்து அணி.

மேலும் லார்ட்ஸில் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியுள்ளது கேன் வில்லியம்சன் தலைமை நியூஸிலாந்து.

362 ரன்கள் பின் தங்கியிருந்த பாகிஸ்தான் அணி தன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ம் நாள் ஆட்ட முடிவில் 8/1 என்று இருந்தது.

இன்று காலை தொடங்கிய பாகிஸ்தான் அணி உயரமான வேகப்பந்து வீச்சாளர் கைலி ஜேமிசன் பந்து வீச்சில் வரிசையாக நடையைக் கட்டினர். ஜேமிசன் 20 ஓவர்கள் வீசி 6 மெய்டன்களுடன் 48 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ட்ரெண்ட் போல்ட் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க பாகிஸ்தான் அணி இன்று 81.4 ஓவர்களில் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெரிய இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியதோடு 2-0 ஒயிட்வாஷ் தோல்வியைத் தழுவியது.

கைலி ஜேமிசன் இந்த டெஸ்ட் போட்டியில் 117 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஸ்டாராகத் திகழ்கிறார். முதல் நாள் கிரீன் டாப் பிட்சிலாவது பாகிஸ்தானின் ரிஸ்வான், அசார் அலி கொஞ்சம் போராடி மானத்தைக் காப்பாற்றினர்.

ஆனால் இன்று புற்கள் காய்ந்த பிறகும் கூட எந்த வீரரும் நிற்க முடியவில்லை. ஒரு வீரர் கூட அரைசதம் எடுக்கவில்லை அசார் அலியும், ஜபர் கோஹரும் தலா 37 ரன்களை எடுத்ததே அதிகபட்சம்.

உயரமான கைலி ஜேமிசன் இந்திய பேட்ஸ்மென்களை எப்படி படுத்தி எடுத்தாரோ அதே போல் லெந்தில் பிட்ச் செய்து பந்தின் தையலை பிட்சில் அடித்து எழுப்பினார். இதில் முதலில் வெளியேறியது அபிட் அலி (26) இவர் பதிலி பீல்டரின் ஒரு கை ஸ்டன்னிங் கேட்சுக்கு பெவிலியன் திரும்பினார். இரவுக்காவலன் மொகமது அப்பாஸ் 3 ரன்களில் ட்ரெண்ட் போல்ட்டிடம் காலியானார்.

ஹாரிஸ் சோஹைல் 15 ரன்களில் எழும்பி வெளியே போகும் பந்தை தொட்டார், விக்கெட் கீப்பர் கேட்சை எடுத்தார். அசார் அலி 37 ரன்களுக்கு தட்டுத்தடுமாறி ஆடிய வேளையில் விலா எலும்புக்கு ஒரு பந்தை ஏத்தினார் ஜேமிசன் முடிந்தது கதை. கேப்டன் ரிஸ்வானுக்கு ஜேமிசன் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் குத்தி உள்ளே பாம்பு போல் கொண்டு வந்தார் ஸ்டம்ப்கள் தெறித்தன.

பவாத் ஆலம் 16 ரன்களில் போல்ட்டிடம் வெளியேற பாஹிம் அஷ்ரப்புக்கு இரண்டு பீல்டர்களை பின்னால் நிறுத்தி ஷார்ட் பிட்ச் எகிறு பந்து என்று நினைக்க வைத்து ஒரு புல் லெந்த் பந்தை வீசினார் வாரிக்கொண்டு அடிக்கப் போன அஷ்ரப் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

கேப்டன் வில்லியம்சன் ஷாஹின் ஷா அப்ரீடி விக்கெட்டை வீழ்த்த, ஜஃபர் கோஹாரை போல்ட் காலி செய்தார் பாகிஸ்தான் 186 ரன்களுக்குச் சுருண்டது.

ஆட்ட நாயகனாக கைலி ஜேமிசன் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டார்.
Published by:Muthukumar
First published: